Dengue Fever: தமிழகத்தில் உண்ணி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில, சுகதாரத்துறை முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதாவது, மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, காய்ச்சல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக அவற்றைப் பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் இருப்பவர்களிடையே சுவாச நோய்த்தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைப்பதையும் இந்த அறிவுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குழந்தைகளுக்குக் காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வித் துறை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேங்கி நிற்கும் நீர் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த இடமாக அமையக்கூடும் என்பதால், தங்கள் வீடுகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் அல்லது பிற அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும், உரிய மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 301 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 17,649 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதத்தின் முதல் 18 நாட்களில் சென்னையில் 614 பேர் டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன
இதன் மூலம், செப்டம்பர் 21ஆம் தேதி நிலரவப்படி இந்த ஆண்டிற்கான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 2,600 ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் 59 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூரில் 38 பேரும், திருவண்ணாமலையில் 22 பேரும், வேலூரில் 10 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் 36 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளது.