Thiruparankundram Deepam Case, Madurai Collector Report: திருப்பரங்குன்றத்தில் வழக்கமான உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் மட்டும் நேற்று (நவ. 24) தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கான காரணத்தை கூறி 17 பக்க அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
Big Twist in Thiruparankundram Case: மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரையில் திருப்பரங்குன்றத்தில் அந்த குறிப்பிட்ட தூணின் மீது தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றுவதற்கான தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்றுவதற்கு வரவில்லை அதனால் தான் தீபம் ஏற்றப்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்
— Niranjan kumar (@niranjan2428) November 25, 2026
மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த நவம்பர் 20ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், நவ. 21ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருடனும், காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தாசில்தார் மற்றும் பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஒவ்வொரு பத்தி வாரியாக விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து நபர்களுக்கு மிகாமல் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. தீபத்தை பொறுத்தவரை கோயில் வழக்கப்படி செயல் அலுவலரால் விளக்கு ஏற்றும் முறை தீர்மானிக்கப்படும். சிஆர்பிஎஃப் படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்றும் தமிழக காவல்துறை படைகளை நிலை நிறுத்தும் திட்டம் தயாராக உள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
நவ. 24ஆம் தேதி தீபம் ஏற்றும் பணியானது தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கொண்ட குழுவினரால் மட்டுமே பிரத்தியேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையை எடுக்க தேவஸ்தான செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் அணி திரளுவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் நம்பகத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும், போராட்டங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கும் எந்த ஒரு நபருக்கும் தடைவிதிக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் BNS சட்டப்பிரிவு 163இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு இன்று (நவ. 25) காலை 10 மணிவரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நவ. 24ஆம் தேதி காலை முதல் நண்பகல் 12 மணிவரை நேரடியாக திருப்பரங்குன்றம் சென்று அந்த இடத்தில் செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஏற்பாடுகளை ஆய்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை ஆணையருடன் கலந்துரையாடப்பட்டது.
இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 17 பக்க அறிக்கையின் சுருக்கமாகும். இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ராமசுப்பு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.