தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு : 1,695 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
tamil nadu government jobs : தமிழக சுகாதாரத் துறையில் 1,695 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே
tamil nadu government jobs : தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய நலவாழ்வுக் குழுமம் (NHM-TN) சார்பில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1,695 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் படிக்க | முதல்வர் காப்பீடு திட்டத்தில் செம அதிரடி: இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
பணி விவரம் மற்றும் சம்பளம்
இயக்குநர் - மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் இயக்குநர் - மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்களில் (CEmONC - SNCU மற்றும் PICU உட்பட) இந்த நியமனங்கள் நடைபெறவுள்ளன. தேசிய நலவாழ்வுக் குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் இந்த 1,695 செவிலியர்களுக்கும் மாதம் ரூ.21,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
இந்தச் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகளில் செவிலியர் பட்டயப் படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி
ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மாவட்ட வாரியான, நிறுவன வாரியான காலிப்பணியிட விவரங்களை தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://nhm.tn.gov.in/](https://nhm.tn.gov.in/) மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்வி மற்றும் பதிவுச் சான்றிதழ் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலர் / செயற் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம் / மாவட்ட நலவாழ்வுச் சங்கம் அல்லது நகர நலவாழ்வுச் சங்க அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 04.12.2026 மாலை 5.00 மணி ஆகும்.
முக்கிய நிபந்தனைகள்
இந்த 1,695 பணியிடங்களும் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலானவை என்பதால், எதிர்காலத்தில் பணி நிரந்தரம் கோர இயலாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் 18.11.2026 நாளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை எண் 427-ன் விதிமுறைகளின்படி பணியமர்த்தப்படுவார்கள் எனத் தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.