SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆன்லைன் பத்திரப் பதிவுத்துறையில் நடந்த மாற்றம்! தமிழ்நாடு அரசின் அப்டேட்

ஆன்லைன் பத்திரப்பதிவுத்துறையில், அலுவலகத்திற்குச் செல்லாமல் ஒன்றரை மாதத்தில் 1 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 03, 2026, 02:00 PM IST | Updated: Oct 03, 2026, 02:05 PM IST
Join

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமின்றி, எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையவழியே தங்களது ஆவணங்களைத் தாக்கல் செய்யும் வகையில் "நேரடி வருகையில்லா ஆவணப் பதிவு" (Presenceless Registration) என்ற புரட்சிகர நடைமுறை கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் கடந்த 17.08.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மனைப்பிரிவில் முதல் விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் விற்பனை ஆகிய இரண்டு வகை ஆவணங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.  

மேலும் படிக்க | பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு! விரைவில் பணி மாறுதல் Explained

திட்டத்தின் அபார வரவேற்பு:

இப்புதிய முறை பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நில விற்பனையாளர்களிடையே மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு மற்றும் இரசீது ஆவணங்கள் ஆகியவையும் கடந்த 15.09.2026 முதல் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.  

நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

இத்திட்டம் பொதுமக்களுக்குப் பல்வேறு வசதிகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது:  

சட்டப்பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை: முழுமையான சட்டப்பாதுகாப்புடன் கூடிய நம்பகமான ஆவணப்பதிவு முறையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  

விடுமுறை மற்றும் ஓய்வு நேர வசதி: பொதுமக்கள் அரசு விடுமுறை நாட்களிலோ அல்லது தங்களது அலுவலக வேலை நேரம் முடிந்த பின்னரோ, தங்களுக்கு ஏற்ற ஓய்வு நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.  

காத்திருக்கத் தேவையில்லாத சூழல்: சார்பதிவாளர் அலுவலகத்தில் வரிசையில் காத்திருக்காமல், கட்டுமான நிறுவனங்கள், நில விற்பனையாளர்கள், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்தே தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும்.  

நேரடி ஆன்லைன் கட்டணம்: ஆவணத்தைச் சமர்ப்பிக்கும் இடத்திலிருந்தே பொதுமக்களே நேரடியாக இணையவழியில் (Online) பதிவுக் கட்டணங்களைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.  

ஒருங்கிணைந்த சமர்ப்பிப்பு: விற்பனை ஆவணம் மற்றும் வங்கிக் கடன் ஆவணம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்துச் சமர்ப்பிக்கும் வசதி உள்ளது.  

பொறுமையாகச் சரிபார்க்கும் வாய்ப்பு: ஆவணத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, வரைவு ஆவணத்தை ஆன்லைனிலேயே பலமுறை பொறுமையாகப் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் மேற்கொண்டு சமர்ப்பிக்கலாம்.  

ஆதார் அங்கீகாரம்: ஆதார் அங்கீகாரத்துடன் கூடிய பதிவு என்பதால் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி இதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.  

மேலும் படிக்க | 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை.. தமிழக அரசின் அறிவிப்பு

ஒன்றரை மாதத்தில் ஒரு லட்சம் ஆவணங்கள் பதிவு:

இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்ட 17.08.2026 முதல் 30.09.2026 வரையிலான வெறும் 44 நாட்களில், மொத்தம் 1,00,134 ஆவணங்கள் இந்த முறையில் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏறக்குறைய ஐந்து லட்சம் பொதுமக்களின் அலைச்சல், தேவையில்லாத கால விரயம் மற்றும் பணச் செலவுகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு குறைக்கப்பட்டுள்ளன.  

அடுத்தகட்ட விரிவாக்கம்:

இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ள தொடர் வரவேற்பைத் தொடர்ந்து, இம்முறையானது பிற ஆவணங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அளிக்கும் ஆலோசனைகள் மற்றும் பின்னூட்டங்களின் அடிப்படையில், இந்த மென்பொருளில் தேவையான மாற்றங்களும் மேம்பாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES