ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை - அரசு அதிரடி அறிவிப்பு
ரேஷன் கடை பணியாளர்களுக்கு 25% கூடுதல் ஊதிய உயர்வு கிடையாது என ஊழியர்களின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த கூட்டுறவுத்துறை.
தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம், அவர்களின் பணிச்சுமைக்கும் தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கும் ஏற்றவாறு போதுமானதாக இல்லை என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப் பணியாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கூட மாதம் ரூ.20,000-க்கும் குறைவான வருமானத்தையே பெற்று வருவதாகக் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் அடிப்படையில், அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 25ல் திருத்தங்களை மேற்கொண்டு, கூடுதலாக 25% ஊதியம் வழங்க வேண்டும் எனவும், சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் இதற்கான சிறப்பு ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்ற முறையை மாற்றி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
கூட்டுறவுத்துறையின் விரிவான பதில்
இக்கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) தர்ப்பகராஜ் அவர்கள் அதிகாரப்பூர்வப் பதில் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், பணியாளர் சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றினை ஏற்க வழிவகை இல்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஊதிய உயர்வு வழங்க இயலாது
கூட்டுறவுத்துறை அளித்துள்ள விளக்கத்தில், அரசாணை எண் 25, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சிஎன்1) துறை, நாள் 05.03.2026-ன் படி நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்கனவே சரியான அளவிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சந்தை நிலவரப்படி ஏற்படும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களுக்கு அவ்வப்போது உரிய விகிதத்தில் அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்த்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கூடுதலாக 25% ஊதிய உயர்வு வழங்க சட்டப்படியோ நிர்வாக ரீதியிலோ எவ்வித வழிவகையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிப்பு
ஊதிய மறுசீரமைப்புக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்ற பணியாளர் சங்கத்தின் கோரிக்கையையும் கூட்டுறவுத்துறை நிராகரித்துள்ளது. தற்போதுள்ள அரசாணை விதிகளின்படி அரசு சார்ந்த அமைப்புகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு முறை அமல்படுத்தப்பட்டு வருவதால், நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறையின் இந்த திட்டவட்டமான மற்றும் நேரடியான பதிலால், கூடுதல் ஊதிய உயர்வு மற்றும் காலமுறை மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.