திருப்பரங்குன்றத்தில் CRPF... பிரதமர் பதிவு முதல் கம்யூனிஸ்ட்களின் பேரணி வரை - பரபரக்கும் அரசியல் களம்
திருப்பரங்குன்றம் கல் தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழலில், சிஆர்பிஎப் படை அங்கு வருகை தந்துள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பிரதமர் மோடியின் X பதிவு அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. திமுக தவெக அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதநல்லிணக்க பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன.
Thiruparankundram Deepam Issue: கடந்த கார்த்திகை தீபம் தினத்தன்று (நவ. 24)மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்திலும், மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹா அருகில் உள்ள கல் தூணிலும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கடந்த நவ. 20ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அந்த தீர்ப்பின் மீது இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இந்தாண்டு கார்த்திகை திபம் தினத்தன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருந்தது.
இன்று தீபம் ஏற்ற உத்தரவு
இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இன்றைய தினம் (நவ. 28) கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு
- தீப மண்டபத்தில் இருந்தோ அல்லது மாற்று வழியிலோ தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
- அதேநேரத்தில் திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள பகுதி முழுவதும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.
- பாதுகாப்புக்கு உட்பட்டு தர்ஹாவில் இருந்து 50 மீட்டர் சுற்றளவு தாண்டி அனைத்து பக்கங்களிலும் தீபம் ஏற்றலாம்.
- திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்ஹா்வை வேறுபடுத்தும் விதமாக அதை சுற்றி தற்காலிக வேலி அமைக்கலாம்.
- திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் சம்மன் மற்றும் அறங்காவலர் குழுவை கலைத்து உத்தரவு.
- முன்னாள் நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழு நியமனம். இந்த குழு உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்.
- வரும் டிசம்பர் 15ஆம் தேதி திருப்பரங்குன்ற தீப வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவு. காணொளி வாயிலாக ஆஜராக வைத்து கோரிக்கை நிராகரித்தது.
சூடுபிடிக்கும் அரசியல் களம்
இதை முன்னிட்டு, பாஜகவினர், வலதுசாரிகள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய மற்றும் இடதுசாரி அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!
பிரதமர் மோடியின் பதிவு
பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என ஆங்கிலம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் பதிவை வரவேற்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கமெண்ட் செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு, மதநல்லிணக்கம், மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற தவெக அரசு என்றும்; திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி என்றும் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக சாடி உள்ளார்.
இடதுசாரிகளின் பேரணி
அதேநேரத்தில், சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) இணைந்து இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும்; இந்த பேரணியில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணையுமாறும், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறும் வேண்டுகோள் விடுப்பதாகவும் இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
CRPF வருகை
இந்தச் சூழலில், மதுரை திருப்பரங்குன்றத்திற்கு சிஆர்பிஎப் வீரர்கள் வருகை தந்துள்ளனர். திருப்பரங்குன்றம் முழுவதையும் சிஆர்பிஎப் தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.