சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி மார்டின் தங்கள் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்ததிலிருந்து இந்த பிரிவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பிரிவின் பின்னணி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா திலகவதி ஐபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் மனைவி "நாங்கள் பிரிகிறோம்" என்ற வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து 'ஜீ தமிழ் நியூஸ்' ஊடகத்திடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா திலகவதி ஐபிஎஸ் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இருவரின் பிரிவுக்கான பின்னணி குறித்த கேள்விக்கு, இதற்கான காரணம் எது என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும், பொதுவாக அவர்களுக்குள் ஒத்து வரவில்லை என்றும் அவர் கூறினார்.
'அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்கு அர்ப்பணித்து வருகிறார். இதன் அடிப்படையில், சில விஷயங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் நான் அதிகமாக செல்ல விரும்பவில்லை. அனைவரின் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.' என்று திலகவதி ஐபிஎஸ் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனாவும் அவரது மனைவி டெய்சியும் சம்மதித்துத்தான் பிரிகிறார்கள் என்றும், நண்பர்களாகவே பிரிகிறார்கள் என்றும் தெரிவித்த திலகவதி ஐபிஎஸ், அவர்களுடைய குழந்தையை இருவரும் இணைந்து வளர்க்கப் போகிறார்கள் என தெரிவித்தார். டெய்சியையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், அவரும் மிக நல்ல பெண் என்றும் அவர் பாராட்டினார்.
ஆதவ் அர்ஜுனா தனது வாழ்க்கையை அரசியலில் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்த திலகவதி ஐபிஎஸ், தனது மகன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்ய வேண்டும் என்றும், அவர் வெற்றிகரமான மகனாக வருவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
டெய்சி மார்டின் தனது அறிக்கையில், 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து நாங்கள் பிரிகிறோம் என்று கூறியுள்ளார். அரசியல் காரணங்களையும் தாண்டி, குடும்பத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் தொடர்ந்து பல செய்திகள் வந்த வண்ணம் இருந்துள்ளன. மனைவி, மாமியார் ஆகியோருடன் ஆதவ் அர்ஜுனாவுக்கு பல பிரச்சனைகள் இருந்துள்ளன. அமைச்சர் மீது தொடர்ந்து சில குற்றச்சாட்டுகளும் வந்துள்ளன. சில யூடியூப் சேனல்களிலும் அவரது உறவினர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பேசியிருந்தார். இந்த குடும்பச் சிக்கல்களும் அவர்களின் பிரிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
இந்த கேள்விக்கு பதிலளித்த திலகவதி, 'இருக்கலாம். அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதோடு, அவருடைய மச்சினர் அரசியலில் இருப்பவர். அவருடைய அரசியல் நிலைப்பாடுகளும், என் மகனின் அரசியல் நிலைப்பாடுகளும் ஒத்துப் போகாது. என் மகன் தனது கொள்கை, தனது கட்சி மற்றும் அரசியல் பயணத்தில் உறுதியாக இருப்பவர். யாருடைய அழுத்தத்திற்கும் அவர் ஈடுகொடுக்க மாட்டார்.
அது ஒரு பக்கம் இருக்கிறது. தொடர்ந்து பிரச்சினைகளும் வாக்குவாதங்களும் இருந்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, நண்பர்களாகப் பிரிந்து, குழந்தையை நல்ல முறையில் வளர்க்கலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.' என்று தெரிவித்தார்.
அவர்கள் 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உறவு எப்படி இருந்தது? வெளியில் இருந்து பார்க்கும்போது, இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்பது பல இடங்களில் தெரிகிறது. அது உண்மையா?
'தொடக்கத்தில் இருவருக்குமான உறவு நன்றாகத்தான் இருந்தது. திருமணத்திற்குள் அரசியல் வந்த பின்னர்தான் அவர் ஒரு பக்கமும், மனைவி ஒரு பக்கமுமாக சென்றுவிட்டார்கள். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகளும், அரசியல் சார்ந்த மாறுபட்ட நிலைப்பாடுகளும் இருந்திருக்கின்றன. மேலும், அவருடைய மனைவி தனது தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த விரும்புகிறார். அவர் பல நிறுவனங்களில் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். அதனால், தனது வணிக நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இதற்காகவே தனது நேரத்தை அதிகமாக செலவிட விரும்புகிறார். சமீப காலமாக இந்த விவகாரம் குடும்பத்திற்குள் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு குடும்பத்தில் எப்போதும் விவாதித்துக் கொண்டே இருக்க முடியாது அல்லவா? "உங்களுக்கு அதுதான் பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள்; எனக்கு இதுதான் பிடிக்கும், நான் இதைச் செய்கிறேன்" என்ற புரிதலுடன் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.' என்று திலகவதி விளக்கினார்.