ஊழலை தடுக்க... லஞ்சத்தை ஒழிக்க... முதலமைச்சர் விஜய் எடுத்த முக்கிய ஆக்சன்
ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும், லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டுமென்ற அரசின் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு, சட்டம் மற்றும் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை அமைத்து, பொது அமைதியை நிலைநிறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
அன்றாட செலவை உயர்த்துவதன் நோக்கம்
இந்த நோக்கத்தினை தமிழ்நாடு காவல்துறை திறம்பட நிறைவேற்றுவதுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல் ஆகியவற்றை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்துவரும் வேளையில், அதற்கான செலவினமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அதில் சுட்டிக்காட்டி உள்ளது. எனவே, அதிகரிக்கும் செலவினத்தை கருத்தில்கொண்டு, காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாவதாக தெரிவித்துள்ளது.
ஊழலை தடுக்க உதவும்
எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்குவதன் மூலம், காவல் நிலையங்களுக்கான நிர்வாக மற்றும் செயலாக்கச் செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் களைவதுடன், இந்த செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு, ஊழலைத் தடுக்கவும், ஒழிக்கவும் வழிவகைசெய்யும் என தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டுமென்ற அரசின் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், காவல்துறையில் நிர்வாகம் மற்றும் செயலாக்கத்திற்கு அன்றாடம் ஏற்படும் முறையான செலவுகளை எதிர்கொள்வதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலையங்களுக்கும் எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி வழங்கப்படும் என்று 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிகையின்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால் அறிவிக்கப்பட்டதும் அரசின் செய்தி குறிப்பில் நினைவுக்கூரப்பட்டுள்ளது.
எவ்வளவு நிதி உயர்த்தப்பட்டுள்ளது?
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் அந்தந்த காவல் நிலையத்தின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், காவல் நிலையங்களின் அன்றாட செலவினங்களுக்காக ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டுவரும் எதிர்பாராச் செலவு நிதி, முறையே 3,750 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 40 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது; 8,250 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆகும் செலவினத்திற்கு 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மரக்கன்று நட்டார். அதேநேரத்தில், காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளைதமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?