TN Social Security Pension Latest News: தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவம் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த 12 வகையான திட்டங்களின் கீழ் 35 லட்சத்து 37 ஆயிரத்து 372 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இவர்களில், சுமார் 15 லட்சத்து 56 ஆயிரத்து 674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு, நடப்பு செம்டம்பரில் வழங்கப்படும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் சுமார் 19 லட்சத்து 20 ஆயிரத்து 858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இந்த திட்டங்களின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஓய்வூதியத் தொகையை, மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் இம்மாதம் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஓய்வூதியத் தொகை 14.09.2026 முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு… pic.twitter.com/6Nni4xKMxR
— TN DIPR (@TNDIPRNEWS) September 12, 2026
இந்நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதி (வெள்ளி) முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை (திங்கள்) மத்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், மேற்குறிப்பிட்ட
திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத் தொகை வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.