கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ பாவம்... சொல்கிறார் மாணிக்கம் தாகூர்
அருள் விக்னேஷ் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் என்றும்; அவர் பாவம், அவருடைய விளக்கத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (நவ. 11) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வரலாற்றில் முக்கியமான நாள்... மதசார்பற்ற இந்திய நாட்டில் முதல் சுதந்திர கல்வி அமைச்சர் பிறந்தநாள்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தியின் சுய சரிதை புத்தகம் பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் கிடைக்கிறது. எந்த ஒரு ஆடம்பர வெளியீட்டு விழா இல்லாமல் சுயசரிதை புத்தகம் வெளியாகி உள்ளது. சோனியா காந்தியின் தியாகத்தையும் அரசியல் ஆளுமையை இந்த சுயசரிதை புத்தகம் காட்டுகிறது" என்றார்.
மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: கம்ப்யூட்டர், வாகன முன்பணம் இனி எளிது!
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்து...
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், "காவல்துறை பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் குடும்பங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக கொலைகள் குறித்து தகவலை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை கூடிவிட்டது என்று சொல்லிக் கொண்டு மட்டும் இல்லாமல் டேட்டாவை வெளியிட்டால் மட்டுமே தெரியவரும். உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஏன் அதையெல்லாம் பேச மாட்டேன் என்கிறார்கள்" என்றார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பாவம்
தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அருள் விக்னேஷ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், "மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முதல் சட்டமன்ற உறுப்பினர். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாவம், அவருடைய விளக்கத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாட்ஸ்அப் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு உள்ளோம். இது போன்ற தவறு நடந்திருந்தால் விசாரிப்பது நல்லது, ஆனால் தவறு நடக்காமல் விசாரிப்பது தவறானது. வாட்ஸ் அப் செய்தியை வைத்து சீரியஸாக விசாரணை செய்வது அலட்சியமாக உள்ளது.
மேலும் படிக்க | ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
வாட்ஸ்அப் தகவலுக்கு விசாரணையா...
குற்றஞ்சாற்றப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய மொபைலை மற்றும் சிசிடிவியை சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். உதயநிதி பேசிய பேச்சு அயோக்கியத்தனமான, அருவருக்கத்தக்கமான பேச்சு. அது போன்ற சட்டமன்ற உறுப்பினர் பேசினாரா அதை நிரூபியுங்கள்" என்றார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதிவிட்டுள்ளாரே என கேள்வியெழுப்பியதற்கு, "வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை வைத்து ஒருவர் மீது விசாரணை நடத்துவது அலட்சியமாக உள்ளது" என ஜோதிமணிக்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்தார்.
ஜோதிமணி போட்ட பதிவு
ஜோதிமணி நேற்று (நவ. 10) போட்ட பதிவில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும்,நேரில் சென்றுவிரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பதிவிட்டிருந்தார். அதேபோல், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அவரது X பக்கத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்எல்ஏ ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?" என பதிவிட்டிருந்தார்.