Guidance TN ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவில்லை... அரசின் விளக்கமும்; டி.ஆர்.பி. ராஜா விமர்சனமும்
தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu முகமையில் இருந்து கடந்த ஜூலையில் பெருமளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. இதற்கு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu முகமையில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ஆந்திராவுக்கு முதலீடு சார்ந்த ரகசியத் தகவல்களை கசியவிடுவதாகவே சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கு Guidance Tamil Nadu முகமை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக, கடந்த ஜூலை மாதத்தில் Guidance Tamil Nadu முகமையில் இருந்து பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விளக்கம்
ஊழியர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுவது என்பது இயல்பான நிறுவன நடைமுறையாகும். Guidance தமிழ்நாட்டில் சிறந்த வேலைவாய்ப்புகள், உயர் கல்வி, இடமாற்றம் மற்றும் தனிப்பட்ட அல்லது குடும்பக் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் பணியில் இருந்து விலகுகின்றனர் என Guidance Tamil Nadu குறிப்பிட்டுள்ளது.
வேறு நிறுவனங்களில் வாய்ப்புகளை தேடிச் செல்ல முடிவு செய்யும் ஊழியர்கள் உட்பட தங்களது ஊழியர்களின் தொழில் சார்ந்த விருப்பங்கள் மற்றும் லட்சியங்களுக்கு Guidance Tamil Nadu எப்போதும் மதிப்பளித்து வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு எப்போதும் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியை நிலைநாட்டி வருகிறது என்றும்; இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்குமே தமிழ்நாடு தொடர்ந்து விருப்பமான முதலீட்டு இடமாக இருந்து வருவதாக Guidance Tamil Nadu தெரிவித்துள்ளது.
டிஆர்பி ராஜாவின் விமர்சனம்
தமிழ்நாடு அரசின் இந்த விளக்கத்திற்கு திமுகவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதில் அவர்,"சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் பெருமளவில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், Guidance Tamil Nadu அதன் விளக்கத்தின் ஆரம்பத்திலேயே பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை என்று மறுத்துள்ளது. இவை முற்றிலும் வேறுபட்ட விஷயங்களாகும்.
பெருமளவிலான பணிநீக்கம் என்ற செய்தியை வெளியிட்டவர்கள், தற்போது தவறானது என தெளிவான பின்னர், இந்த உண்மையை விளக்கம் செய்தியை வெளியிடுவார்களா...? அப்படி வெளியிடுவார்கள் என்று நான் நினை்க்கவில்லை.
திட்டமிட்டு உருவாக்கியவை
ஏன் என்று யோசித்துப் பாருங்கள், ஏனெனில் சில அரைகுறை அறிவுடையே முட்டாள்களால், தவெக நிர்வாகத்திற்குள் இருக்கும் சிலர் தவறான நோக்கத்துடன், Guidance Tamil Nadu-ல் உளவாளிகள் தொடர்பான முழு செய்தியையும் திட்டமிட்டு உருவாக்கியதாகத் தெரிகிறது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுகவின் மீது பழிப்போடும் சிலர்
வழக்கம்போல் தவெக ஆட்சியின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தோல்விகளுக்கு திமுகவைப் பழி சுமத்துவது பாதுகாப்பது என அவர்கள் நினைத்தனர் என்றும் ஆனால் இந்த விவகாரம் அவர்களின் திட்டத்திற்கு் எதிராகப் பெரியளவில் திரும்பிவிட்டது என்றும் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.
வேதனை தெரிவித்த டிஆர்பி ராஜா
இப்போது அரசியல் தலைவர்களின் குழப்பத்திற்கும் தவறுகளுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு அரசியல் சர்ச்சையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய நிறுவனமே (Guidance Tamil Nadu) தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த தொழில்முறை நிபுணர்கள் சிலரின் பல தசாப்த கால உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை தேவையற்ற அரசியல் சர்ச்சைக்குள் இழுத்துச் செல்வதைப் பார்ப்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டிருந்தார்.
Guidance Tamil Nadu ஊழியர்களுக்கு அட்வைஸ்
Guidance Tamil Nadu ஊழியர்களுக்கும் அவர் சில வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டின் தொழில்துறையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் அனைவரிடமும் உள்ளது என்றும் லட்சக்கணக்கான மக்களின் கனவுகள், வாழ்வாதாரம், எதிர்கால ஆசைகள், இந்தியாவின் முதன்மையான மாநிலமான தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் நீங்கள் காட்டும் தொழில்முறைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத உழைப்பைப் பொறுத்தே அமைந்துள்ளது என்று அப்பதிவில் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சர்ச்சைகள், அந்த இலக்கை நோக்கிய உங்கள் பணியில் இருந்து கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள், கவனத்துடன் இருந்து, சுறுசுறுப்பாக செயல்படுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தையும் விட மேலாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடுகள், தனிப்பட்ட நோக்கங்கள் அல்லது ஆட்சி மாற்றங்கள், நீங்களும் நம்மில் பலரும் கடினமாக உழைத்து உருவாக்கிய நிறுவனத்தின் சிறப்பையும் தரத்தையும் சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவின் இறுதியாக அரசாங்கங்கள் வரும், போகும், ஆனால் தமிழ்நாட்டின் நலன்களே எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.