• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ரூ.3 காேடி கமிஷன்..10 கோடியில் வீடு! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்..

ரூ.3 காேடி கமிஷன்..10 கோடியில் வீடு! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்..

தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா, தன்னைப்பற்றி வலம் வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 29, 2026, 08:56 AM IST|Updated: Oct 29, 2026, 09:05 AM IST
joinshare
ரூ.3 காேடி கமிஷன்..10 கோடியில் வீடு! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்..
Image Credit: TVK Keerthana | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று: பருவமழை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு வரை... என்னென்ன எதிர்பார்க்கலாம்?

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று: பருவமழை முதல் தீபாவளி சிறப்பு தொகுப்பு வரை... என்னென்ன எதிர்பார்க்கலாம்?

2

ரூ.3 காேடி கமிஷன்..10 கோடியில் வீடு! குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்..

3

EPS Pension: ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா? நவம்பர் 19 முக்கிய கூட்டம்

4

ஸ்பெயின் ரயில் விபத்து..பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு! உதவி எண்களை அறிவித்த இந்தியா..

5

புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு! மத்திய அரசு அதிரடி உத்தரவு..இதனால் என்ன ஆகும்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சுற்றி, எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. சமீபத்தில் அவர் சிவகாசியில் உள்ள திருத்தங்கல் ரயில்வே மேம்பாலத் திட்டம் தொடர்பாக, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து ₹3 கோடி இலஞ்சம் அல்லது கமிஷன் கோரப்பட்டதாக சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ஆன்லைன் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

பொய் உண்மையாகி விடாது..!

அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டிருக்கும் பதிவில் ஒரு பொய் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, ​​மக்கள் அதை உண்மை என்று தவறாகக் கருதத் தொடங்கலாம் ஆனால், ஒரு பொய் பலமுறை சொல்லப்பட்டதால் அது உண்மையாகிவிடாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆதாரங்களுக்குப் பதிலாகத் தவறான தகவல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. பொதுவாழ்வில் பொறுப்புக்கூறல் அவசியம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். விமர்சனங்கள், கேள்விகள் மற்றும் கடுமையான கருத்து வேறுபாடுகள் கூட ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அங்கங்களே. இவற்றை நான் வரவேற்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

“என் பணிகளில்தான் கவனம் செலுத்த விரும்புகிறேன்..”

தொடர்ந்து, “எனக்கு வழங்கப்பட்ட பணிகளில் மட்டுமே நான் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறேன்: தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் மிகவும் வளமான, முன்னேறிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பது ஆகியவை இதில் அடங்கும். என் மீது வீசப்படும் அவதூறுகளைப் பொருட்படுத்தாமல், எனது பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன்” என்று அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டிருக்கிறார்.

Facts matter. Criticism is welcome, false fabrications are not. Accountability is essential but fake allegations cannot be allowed to replace facts. Criticism and slander are not the same. Full statement: https://t.co/Z2XTK4MTuU

— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) October 28, 2026

அவதூறுகளுக்கு பதிலடி..!

விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாக குறிப்பிடும் அமைச்சர் கீர்த்தனா, தன்னுடைய பணிகளைப் பற்றி கேள்வி எழுப்புவதற்கும், எனது தனிப்பட்ட அல்லது தொழில்முறை நேர்மை குறித்து திட்டமிட்டுப் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது என கூறுகிறார். மேலும், “இதை நான் மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்: ஊழல் மூலம் நான் ஒரு ரூபாய்கூடப் பெறவில்லை. நான் லஞ்சம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை; எந்தவொரு முறையற்ற நிதி நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்லாமல், பொது நலனுக்காகவும் மக்களுக்கான சேவையை நோக்கியும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது” என கூறியிருக்கிறார்.

தன்னைப்பற்றிய அவதூறு குறித்து குறிப்பிட்டு பேசிய அமைச்சர் கீர்த்தனா, “சமீபத்திய வாரங்களில், எனக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இருப்பதாகக் கூறப்பட்டது. பிறகு, அதே கதை வளர்ந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு என்று மாற்றப்பட்டது. திருப்பதியில் நான் அணிந்திருந்த ஒரு சாதாரண ஆபரணத்தை, தங்க நாணயங்கள் கொண்ட மாலை என்று சித்தரித்தனர். இப்போது, ​​ஒரு பாலம் கட்டுமானப் பணியில் 3 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது; ஆனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே இதை மறுத்துள்ளார்” என கூறியிருக்கிறார்.

பதவியேற்ற நாளில் இருந்து கேலி-கிண்டல்தான்..!

“குற்றச்சாட்டுகளில் கூறப்படும் எண்கள் மாறுகின்றன, கதைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் எங்கும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. சில நாட்களுக்கு ஒருமுறை புதிய எண்களைக் கொண்ட ஒரு குற்றச்சாட்டு, உண்மையான கண்டுபிடிப்பு ஆகாது; அது தீய நோக்கத்துடன் புனையப்பட்ட ஒரு பொய் மட்டுமே. சமூக ஊடகங்களிலோ அல்லது பொதுவெளியிலோ மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதன் மூலம், இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையானவை போலத் தோற்றமளிக்க அனுமதிக்கக் கூடாது.

நான் பதவியேற்ற நாள் முதலே, கேள்விகளுக்கும், கேலிகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆளாகி வருகிறேன். பொதுவாழ்வில் இத்தகைய தீவிரக் கண்காணிப்பு இருப்பது இயல்புதான் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஊழல் குறித்த குற்றச்சாட்டு என்பது சாதாரண விமர்சனம் அல்ல. அது எனது நேர்மையையும், மக்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறும் சூழ்ச்சியான குறிப்புகள் அல்லது தொடர்ச்சியான பிரச்சாரங்களால் அல்ல, மாறாக உண்மையான ஆதாரங்களால் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் கீர்த்தனா குறிப்பிடுகின்றார்.

குற்றச்சாட்டுகள் சித்தரிப்பு..!

“நான் எந்தவிதமான ஆய்விற்கும் அப்பாற்பட்டவள் என்று ஒருபோதும் கருதவில்லை; எனது முடிவுகள் அல்லது மக்கள் பிரதிநிதியாக எனது செயல்பாடுகள் குறித்த கேள்விகளிலிருந்து விலக்கு பெறவும் நான் விரும்பவில்லை. நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், எனது பணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படவும் நான் தயாராக இருக்கிறேன். முறைகேடு நடந்ததற்கான உண்மையான ஆதாரங்கள் யாரிடமாவது இருந்தால், அவற்றை உரிய அதிகார அமைப்புகளிடம் சமர்ப்பிக்கலாம்; அதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உண்மையானவை போல சித்தரித்து முன்வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | திருப்பதி கோவிலுக்கு காசுமாலை அணிந்து வந்த விவகாரம்..அமைச்சர் கீர்த்தனா அதிரடி பதில்!

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்..!

“இனிவரும் காலங்களில், ஊழல் அல்லது முறைகேடு குறித்த ஆதாரமற்ற, தீய 
நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு எதிராகச் சட்டப்பூர்வமான மற்றும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், அவற்றை உண்மைகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்பது நமது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை; ஆனால், அது புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் மூலம் தனிநபர்களை அவதூறு செய்வதற்கான உரிமம் அல்ல. உண்மையை உறுதிப்படுத்தாமல் குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்கள், சட்டப்படி அதற்குரிய விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, “நான் பொது வாழ்க்கைக்கு வந்தது தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கவே தவிர, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சர்ச்சைகளுக்குத் தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்க அல்ல. எனது நேரமும் ஆற்றலும், என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளுக்கும், எங்கள் பணிகளின் மூலம் மேம்பட வேண்டிய மக்களுக்கும் உரியவை.

எங்கள் பணிகளை எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் விமர்சியுங்கள். எங்கள் முடிவுகளைக் கேள்வி கேளுங்கள். பொறுப்புக்கூறலைக் கோருங்கள். இத்தகைய உரிமைகளை நான் எப்போதும் மதிப்பேன்; உண்மையான விமர்சனங்களைக் கேட்டு, அவற்றை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்பச் செயல்படுவேன். ஆனால், திட்டமிட்ட பொய்களையும், ஊழல் குறித்த புனையப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். எனது நேர்மையைக் காக்க, சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் நான் பயன்படுத்துவேன்.

உண்மைகளுக்கே முக்கியத்துவம் உண்டு. பொறுப்புக்கூறல் என்பது இரு தரப்பிற்கும் பொருந்தும். தமிழ்நாட்டு மக்களுக்கான எனது பணி தொடர்ந்து நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் கீர்த்தனா.

மேலும் படிக்க | ஆறுகளில் நுரை பொங்க..ஷாம்பு, சோப்புதான் காரணம்! தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu