தமிழக அரசு தரும் கூடுதல் மானியம்... சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? நன்மைகள் என்ன? Explained
பிஎம் சூர்யா கர் திட்டத்தில் மத்திய மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் மானியத்துடன் ரூ.1 லட்சம் வரை சோலார் மானியம் பெறுவது எப்படி? நெட் மீட்டரிங், மின்கட்டண சேமிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
நாட்டின் மின்சார தேவை என்பது கடந்த சில மாதங்களாகவே அதிகமாகி உள்ளது. கடும் வெயில் காரணமாக செப்டம்பர் மாதத்தில் கூட அதிக வெப்பம் காரணமாக மின்தேவையும் அதிகரித்திருந்தது.
நாட்டில் அனல்மின் நிலையம், நீர்மின் நிலையம், காற்றாலை மின் உற்பத்தி நிலையம், அணுமின் நிலையம் தொடங்கி பல்வேறு வழிகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இருப்பினும் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பொதுமக்களுக்கு மானியம் வழங்குகின்றன.
அந்த வகையில், மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட முன்னோடித் திட்டம்தான் 'PM Surya Ghar: Muft Bijli Yojana. தமிழ்நாடு அரசு வீடுகள்தோறும் பசுமை மின்சாரம் என்ற பெயரில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் பின்னணி, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மானிய விவரங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், இதன் பலன்கள் உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: நோக்கம்
- இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பான்மையான மின்சாரம் அனல் மின்நிலையத்தில் இருந்துதான் வருகிறது.
- இதனால் காற்று மாசுபாடு அதிகரிப்பதுடன் கரியமில வாயு வெளியேற்றமும் கூடுகிறது. சர்வதேச பருவநிலை மாற்ற இலக்குகளை எட்டவும். இந்தியாவில் பசுமை மின் உற்பத்தியை அதிகரிக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசற்ற ஆற்றலைப் பரவலாக்கலாம்.
- வீட்டு நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படும் அதிக மின் கட்டணத்தை இது கட்டுப்படுத்தும்.
- அதுமட்டுமின்றி கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சார வாரியத்திற்கே வழங்கி வருவாய் ஈட்ட வழிவகை உள்ளது.
- அதாவது, ஒரு கோடி வீடுகளின் மாடிகளில் சூரிய மின் தகடுகளை (Solar Rooftop) அமைத்து, அதன்மூலம் மாதம் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் கிடைக்க வழிவகுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
- 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி பொருத்தப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் இலக்காக உள்ளது.
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: எப்படி இயங்குகிறது?
பசுமை மின்சாரம் வழங்கும் திட்டத்தில் சோலார் அமைப்புகள் ஆன்-கிரிட் (On-Grid System) முறையில் மின் வாரியத்தின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றன.
பகல் நேர உற்பத்தி: பகலில் உங்கள் வீட்டின் மாடியில் பொருத்தப்படும் சோலார் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். உங்கள் வீட்டின் மின் உபயோகத்திற்குப் போக மீதமுள்ள மின்சாரம் அரசு மின் கட்டமைப்பு்கு அனுப்பப்படும்.
இரவு நேரப் பயன்பாடு: சூரிய ஒளி இல்லாத இரவு நேரங்களில் வழக்கம்போல் மின் வாரியத்தின் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நெட் மீட்டரிங்: இதற்காகவே இருவழி மின் மீட்டர் பொருத்தப்படும். இது நீங்கள் கிரிட்டுக்கு அனுப்பிய மின்சாரத்தையும், கிரிட்டில் இருந்து எடுத்த மின்சாரத்தையும் தனித்தனியாகப் பதிவு செய்யும்.
கட்டணச் சுழற்சி: மாத முடிவில் நீங்கள் உற்பத்தி செய்த யூனிட்டுகள் நீங்கள் பயன்படுத்திய யூனிட்டுகளில் இருந்து கழிக்கப்பட்டு பில் கணக்கிடப்படும். நீங்கள் உபயோகித்ததை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்திருந்தால், அதற்கான தொகை உங்கள் மின் கணக்கில் வரவு வைக்கப்படும். அடுத்தடுத்த பில்களில் கழிக்கப்படும்.
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: மானிய விவரம்
| நிறுவுதிறன் | மத்திய அரசு மானியம் | தமிழக அரசின் கூடுதல் மானியம் | மொத்த மானியம் | 2 மாதங்களுக்கான மின் கட்டண சேமிப்பு (தோராயமாக) |
| 1 கிலோவாட் வரை | ரூ.30 ஆயிரம் | ரூ.5 ஆயிரம் | ரூ.35 ஆயிரம் | ரூ.2,016 |
| 2 கிலோவாட் வரை | ரூ.60 ஆயிரம் | ரூ.10 ஆயிரம் | ரூ.70 ஆயிரம் | ரூ.6,552 |
| 3 கிலோவாட் வரை | ரூ.78 ஆயிரம் | ரூ.22 ஆயிரம் | ரூ.1 லட்சம் | ரூ.11,592 |
**இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் நுக்ரவோரின் மின்கட்டணத்தின் அடிப்படையில் மற்றும் சோலார் மின் உற்பத்தி உள்ளூர் வானிலையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது.
மேலும் படிக்க | TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு HM பதவி உயர்வு எப்போது? முக்கிய அப்டேட்
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
- https://tnebltd.gov.in/usrp/ என்ற இணையதளத்தில் தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.
- இதில் அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்களை பற்றிய தகவல்களை அறியலாம்.
- மாநிய விவரங்கள், விண்ணப்ப நடைமுறைகள், திட்டத் தகவல்களை ஒரே தளத்தில் அறியலாம்.
- தமிழ்நாடு அரசின் கூடுதல் மானியத்திற்குத் தனியாக இரண்டாவது விண்ணப்பம் தேவையில்லை.
- விண்ணப்பித்த பின்ன உள்ளூர் மின்வாரிய அதிகாரி நேரில் வந்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியான ஒப்புதலை வழங்குவார்.
- போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட தகுதியான நிறுவனங்கள் மூலமாக மட்டுமே சோலார் கட்டமைப்பை நிறுவ வேண்டும்.
- சோலார் அமைக்கப்பட்டதும் பணி நிறைவு விவரங்களைச் சமர்பிக்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நெட் மீட்டரை பொருத்துவர்.
- ஆணையிடல் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் இணையத்தளத்தில் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை பதிவேற்ற வேண்டும். அடுத்த 30 நாட்களுக்குள் மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதன் நன்மைகள் என்ன?
- முறையான திட்டமிடலுடன் 3 கிலோவாட் வரை சோலார் அமைத்தால், மாதாந்திர வீட்டு மின்கட்டணமே இல்லாமல் போக வாய்ப்புள்ளது.
- சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும் திறன் கொண்டவை. ஆரம்ப முதலீடு என்பது 3 முதல் 4 ஆண்டுகளில் மின்சார சேமிப்பின் மூலம் முழுமையாக ஈடுசெய்யப்பட்டுவிடும். அடுத்த 20 ஆண்டுகள் இலவச மின்சாரம் கிடைக்கும்.
- மரபுசாரா ஆற்றலைப் பயன்படுத்துவதால் கார்பன் உமிழ்வு கணிசமாக குறையும்.
மக்கள் கவனிக்க வேண்டியவை
- வீட்டின் கூரையில் நிழல் விழாத திறந்தவெளி இடம் கட்டாயம் தேவை. அதாவது 1 கிலோவாட் திறனுக்கு சுமார் 100 முதல் 120 சதுர அடிவரை.
- வாடகை வீடுகளில் இருப்பவர்கள் அல்லது பழைய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதை தனிப்பட்ட முறையில் அமைப்பது சற்றே கடினமாகும்.
- பேனல்களின் மீது தூசி படியாமல் இருக்க 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரில் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை : தீபாவளி பரிசாக ரூ.2000 கொடுக்கப்படுமா? முக்கிய அப்டேட்