அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இது அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக்டோபர் 09) காலை தொடங்குகிறது.
இடைத்தேர்தல் முடிவுகள் தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் ஆதரவு எந்த பக்கம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள உஅதவும் என்பதால், சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளனர்.
6 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா விவகாரம்.. உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
தமிழக அரசியல் களத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் ஒருபக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா தொடர்பான வழக்கும் மற்றொருபுரம் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட 6 எம்.எல்.ஏக்களும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து கடிதங்களை அளித்த நிலையில், அந்த கடிதங்களை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிராக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பான மனுக்கல் நிலுவையில் இருந்தபோதே, எம்.எல்.ஏக்களின் ராஜினாமா சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை உரிய முறையில் விசாரிக்காமல் முடிவெடுக்கப்பட்டதாகவும்மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. எனவே சபாநாயகரின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சபாநாயகர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் என்ன?
இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய பின்னரே கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், விருப்பமின்றி ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் பதவில் தொடர வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் சபாநாயகர் தரப்பு வாதிட்டது.
இரு தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது.