SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருச்சி : வைகுண்ட ஏகாதசி தேதி, நேரம், சிறப்பு பேருந்துகள் மற்றும் ஏற்பாடுகள் முழு விவரம்

Srirangam Vaikunta Ekadasi : திருச்சி ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 16, 2026, 16:50 IST | Updated: Nov 16, 2026, 16:56 IST
Image Credit: Srirangam Vaikunta Ekadasi
Join

Srirangam Vaikunta Ekadasi : திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி பெருவிழாவினை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகின்ற 09.12.2026 முதல் 30.12.2026 வரை நடைபெற உள்ளது. 20.12.2026 அன்று மேற்படி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தர உள்ளதை முன்னிட்டு சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆயிரம்கால் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க | சம்மதமின்றி LPG இணைப்பு முடக்கம்: திருச்சி திருவெறும்பூர் மக்கள் கொந்தளிப்பு - பின்னணி

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் போது தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், பக்தர்கள் வரிசையாக செல்வதற்கான வழித்தடங்களை ஒழுங்குபடுத்திடவும், குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள், சுகாதார பராமரிப்பு, மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்தல், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கோவிலைச்சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்திடவும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 19.12.2026 முதல் 20.12.2026 மற்றும் 21.12.2026 ஆகிய முக்கிய திருநாட்களில் சிறப்பு இரயில் வண்டிகள் இயக்கவும், ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல இரயில்வே துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

19.12.2026 முதல் 20.12.2026 மற்றும் 21.12.2026 ஆகிய நாட்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகப்படியான சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தங்களில் ஸ்ரீரங்கம் வந்து செல்லும் வழி விபரம் குறித்த அறிவிப்பு பலகைகள் அமைத்திட வேண்டும். சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், வாய்க்கால்கள் மற்றும் கழிவு நீர் தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்திடவும், அன்னதானம் வழங்குபவர்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து குறிப்பிட்ட இடங்களில் மட்டும் உணவு வகைகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

திருக்கோயில் வளாகத்திற்குள் பக்தர்களுக்கு வரிசையாக செல்வதற்கான வழித்தடங்களை ஒழுங்குபடுத்திடவும், திருக்கோயிலின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைத்து பராமரித்திடவும், ஜெனரேட்டர் தயார் நிலையில் வைத்திடவும் வேண்டும். மின்சாரத்துறையினர் ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்கிடவும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையான பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் துணை ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், மண்டல இணை ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES