SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: சம்பளம், ஓய்வூதியம், HRA, OPS, பதவி உயர்வு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய கோரிக்கைகள்

8th Pay Commission: கூட்டு ஆலோசனைக் குழுவின் தேசிய கவுன்சில் (NC-JCM), 8வது ஊதியக் குழுவிடம் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் முதன்மை அமைப்பான NC-JCM, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களில் மாற்றங்களைக் கொண்டுவர முன்மொழிந்துள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 12, 2026, 09:17 AM IST | Updated: Nov 12, 2026, 09:26 AM IST
Image Credit: 8th Pay Commission Update
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுதும் பல கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய குழு, பெறப்பட்ட கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலும், தற்போதைய நிதி நிலை மற்றும் எதிர்கால காரணிகளையும் கொண்டு தனது பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

NC-JCM பரிந்துரைகள்

கூட்டு ஆலோசனைக் குழுவின் தேசிய கவுன்சில் (NC-JCM), 8வது ஊதியக் குழுவிடம் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் முதன்மை அமைப்பான NC-JCM, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களில் மாற்றங்களைக் கொண்டுவர முன்மொழிந்துள்ளது.

தகுதியுள்ள ஊழியர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனைகளை முழுமையாக முடித்த பின்னரே, 8வது ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். 8வது ஊதியக் குழுவிடம் NC-JCM முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் பற்றி இங்கே காணலாம்:

குறைந்தபட்ச ஊதியம் ₹69,000, 3.833 ஃபிட்மென்ட் ஃபாக்டர்

நிலை 1 (Level 1) ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ₹18,000-லிருந்து ₹69,000-ஆக உயர்த்த வேண்டும் என NC-JCM ஊழியர் அமைப்பு முன்மொழிந்துள்ளது. இதற்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (fitment factor) 3.833 ஆக மாற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய நிலைகளின் இணைப்பு

தற்போதுள்ள சில ஊதிய நிலைகளை ஒன்றிணைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, நிலை 2 மற்றும் நிலை 3 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ஒன்றிணைத்து, ₹83,200 என்ற ஒற்றை ஊதிய அளவுகோலின் கீழ் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

67% ஆக ஓய்வூதிய உயர்வு

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பெறும் ஓய்வூதியத்தை அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 67%-ஆக உயர்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஊழியர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50%-ஆக உள்ள ஓய்வூதியத் தொகையை, 67%-ஆக உயர்த்த NC-JCM முன்மொழிந்துள்ளது. அதேபோல், குடும்ப ஓய்வூதிய விகிதத்தை 30%-லிருந்து 50%-ஆக அதிகரிக்கவும் இந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

ஆண்டு ஊதிய உயர்வு

ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை இருமடங்காக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ஆண்டுதோறும் 3% ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, இந்த விகிதத்தை இருமடங்காக்கி, 6%-ஆக உயர்த்த வேண்டும் என்று NC-JCM கோரியுள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

வீட்டு வாடகைப்படியை (HRA) உயர்த்துத கோரிக்கை

NC-JCM அமைப்பு, வீட்டு வாடகைப்படியை (HRA) உயர்த்துமாறு பரிந்துரைத்துள்ளது. இதன்படி, 'X' வகை நகரங்களுக்கு 40 சதவீதமாகவும், 'Y' வகை நகரங்களுக்கு 35 சதவீதமாகவும், 'Z' வகை நகரங்களுக்கு 30 சதவீதமாகவும் வீட்டு வாடகைப்படியை அதிகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தற்போது இந்த விகிதங்கள் முறையே 30%, 20% மற்றும் 10% என உள்ளன.

இந்த முன்மொழியப்பட்ட விகிதங்கள் நடைமுறைக்கு வந்தால், ஊழியர்கள் பணிபுரியும் நகரத்தைப் பொறுத்து, அவர்களுக்குக் கிடைக்கும் மாதாந்திர வீட்டு வாடகைப்படி (HRA) அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Explained: 8வது ஊதியக் குழு - லெவல் 6 மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் அரியர் தொகை!! கணக்கீடு என்ன?

விடுப்பு பணமாக்கும் வரம்பை 600 நாட்களாக உயர்த்த கோரிக்கை

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, ​​தாங்கள் ஈட்டிய விடுப்புகளில் (Earned Leave) அதிகபட்சம் 300 நாட்களுக்கான விடுப்பை பணமாக மாற்றிக்கொள்ள (Leave Encashment) அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வரம்பை இருமடங்காக்கி, 600 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று NC-JCM ஊழியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விடுப்பு நாட்களைப் பணமாக மாற்றும் தொகை, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இவற்றை தவிர இன்னும் பல முக்கிய கோரிக்கைகளையும் NC-JCM அமைப்பு முன்வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இவை அனைத்தும் வெறும் பரிந்துரைகள் மட்டுமே. ஊதியம், ஓய்வூதியம் மற்றும் படிகளில் ஏற்படக்கூடிய உண்மையான மாற்றங்கள், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசு இறுதியாக எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

8வது ஊதியக் குழு அமலாக்கம்

8வது ஊதியக் குழு, நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. இதில் பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊதியக் குழு, அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதன் பணி வரம்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆண்டு கால ஊதிய மறுஆய்வு சுழற்சியின் அடிப்படையில், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு, 67% ஓய்வூதியம், 40% HRA... அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES