8வது ஊதியக் குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா? அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
8th Pay Commission: புதிய ஊதிய அமைப்பு அமல்படுத்தப்பட்டதும் அகவிலைப்படி (Dearness Allowance - DA) பூஜ்ஜியத்திற்கு மாற்றப்படுமா? இந்த கேள்வி பல ஊழியர்களின் மனதில் எழுந்துள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அர்சு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், நாளுக்கு நாள் பல்வேறு ஊகங்களும் கணிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றி அகவிலைப்படி பற்றியது.
அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா?
புதிய ஊதிய அமைப்பு அமல்படுத்தப்பட்டதும் அகவிலைப்படி (Dearness Allowance - DA) பூஜ்ஜியத்திற்கு மாற்றப்படுமா என்ற கேள்வி பல ஊழியர்களின் மனதில் எழுந்துள்ளது. தற்போது அகவிலைப்படி 63 சதவீதமாக உள்ளது, மேலும் இது ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், இதில் எந்த மாற்றமும் நடைமுறைக்கு வரவில்லை.
7வது ஊதியக் குழுவின் நடைமுறைப்படி தற்போது அகவிலைப்படி வழக்கம்போல தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படியைப் பூஜ்ஜியத்திற்கு மாற்றும் நடைமுறை என்பது, புதிய ஊதிய அமைப்பை அமல்படுத்தும்போது பின்பற்றப்படும் ஒரு பொதுவான செயல்முறையாகும். இது குறித்த தவறான புரிதல்களைத் தவிர்க்க, இந்த நடைமுறையைச் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான பொதுவான நடைமுறை என்ன?
- ஒவ்வொரு முறை புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போதும், ஊழியர்கள் பெற்று வந்த அகவிலைப்படியானது வெறும் கூடுதல் தொகையாக மட்டும் சேர்க்கப்படுவதில்லை; மாறாக, அது புதிய அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுகிறது.
- 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) கணக்கீடு இந்த அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
- ஏற்கனவே இருந்த அடிப்படை ஊதியமும், அதுவரை திரட்டப்பட்ட அகவிலைப்படியும் ஒன்றிணைக்கப்பட்டு, புதிய மற்றும் அதிக மதிப்பிலான அடிப்படை ஊதியம் உருவாக்கப்படுகிறது.
- இவ்வாறு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டவுடன், அகவிலைப்படி பூஜ்ஜியத்திற்கு மாற்றப்படுகிறது.
- அதன் பிறகு, பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி படிப்படியாக உயர்த்தப்படுகிறது.
7-வது ஊதியக் குழுவின்போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. புதிய அடிப்படை ஊதியம் 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது. அப்போது அகவிலைப்படி பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, காலப்போக்கில் படிப்படியாக உயர்ந்தது.
அகவிலைப்படியைப் பூஜ்ஜியத்திற்கு மாற்றுவதால் இழப்பு ஏற்படுமா?
அகவிலைப்படியைப் பூஜ்ஜியத்திற்கு மாற்றினால், கையில் கிடைக்கும் ஊதியம் (take-home pay) குறைந்துவிடுமோ என்று பல ஊழியர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது.
முந்தைய அடிப்படை ஊதியமும், அதுவரை திரட்டப்பட்ட அகவிலைப்படியும் (தற்போது 63 சதவீதம் அல்லது 8வது ஊதியக் குழு அமலுக்கு வரும்போது இருக்கும் விகிதம்) ஒன்றிணைக்கப்பட்டு, புதிய மற்றும் அதிக மதிப்பிலான அடிப்படை ஊதியம் உருவாக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஊதியத்தில் ஒரு கூடுதல் உயர்வை வழங்குகிறது.
மேலும், வீட்டு வாடகைப்படி (House Rent Allowance - HRA) போன்ற முக்கிய படிகள், இந்த புதிய மற்றும் உயர்ந்த அடிப்படை ஊதியத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன. இது ஒட்டுமொத்த ஊதியத்திற்கான அடிப்படை அளவையே உயர்த்துவதால், ஊழியர்களுக்குப் பயன் கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த உயர்ந்த அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் புதிய அகவிலைப்படி (Dearness Allowance - DA) கணக்கிடத் தொடங்குகிறது. இதன் விளைவாக, குறுகிய காலத்திற்குள்ளேயே மொத்த ஊதியத் தொகை முந்தைய அளவுகளை விட அதிகரித்துவிடுகிறது.
தற்போதைய நிலை மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரை
இந்த முழுச் செயல்முறையும், ஊதியக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து, அதன் மீது அரசாங்கம் முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்ட பின்னரே தொடங்கும். இதற்கான நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, எந்தவொரு குறிப்பிட்ட தேதியும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், தற்போதுள்ள விதிகளின்படி அகவிலைப்படி தொடர்ந்து உயரும்; பணியாளர்கள் வழக்கம்போல அதைப் பெற்றுக்கொள்வார்கள். எனவே, அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திற்கு (zero) கொண்டு வரப்படும் என்பது போன்ற விவாதங்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை; இது ஊதியக் கட்டமைப்பில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ஒரு வழக்கமான நடைமுறையாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்
வதந்திகளின் அடிப்படையில் எந்த வித மன உளைச்சலுக்கும் ஊழியர்கள் ஆளாக வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் ஊழியர்களின் துறை வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த நடைமுறை ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கும். புதிய ஊதியக் கட்டமைப்பு அமல்படுத்தப்படும்போது, புதிய அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் மறு கணக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல், அகவிலை நிவாரணமும் (Dearness Relief - DR) பூஜ்ஜியத்திற்கு மாற்றப்பட்டு, புதிய அடிப்படை அளவிலிருந்து மீண்டும் கணக்கிடத் தொடங்குகிறது.
எனவே, இந்த 'டிஏ இணைப்பு' (DA Merger) என்பது பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும் பொருந்தும் ஒரு முக்கியமான அம்சமாகும். அகவிலைப்படி ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியவுடன், அது தானாகவே அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சில பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், இது ஒரு கோரிக்கையாக மட்டுமே உள்ளது, நடைமுறையில் உள்ள விதியல்ல. தற்போதைய அமைப்பின்படி, இத்தகைய இணைப்பு என்பது புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போது மட்டுமே இதுவரை நிகழ்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.