மைசூரு தசரா விழா, உலகப்புகழ் பெற்ற ஒன்றாகும். இந்த பண்டிகை, உலகப்புகழ் பெற்ற ஒன்றாகும். இதனை, நாடா ஹப்பா என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த பண்டிகை 10 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள, உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் மக்கள் வருவர். தசரா விடுமுறையையொட்டி, மைசூரு மற்றும் அதை சுற்றியிருக்கும் சுற்றுலா தலங்களை பலர் பார்வையிட வருவர். அவர்களுக்காகவே, ‘தர்ஷினி’ சிறப்பு சுற்றுலா தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இயற்கை அழகு சூழ்ந்த சுற்றுலா தலங்களையும், ஆன்மீக தலங்களையும் குறைந்த செலவில் நீங்கள் சுற்றி பார்க்க இயலும். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
மலைகள் மற்றும் காடுகளை ரசிக்க பலர் விரும்புவார்கள். அவர்களுக்காக, இந்த சிறப்பு தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பந்திப்பூர், ஹிமவத் கோபாலஸ்வாமி பெட்டா, பிலிகிரி ரங்கன பெட்டா, நஞ்சன்கூடு மற்றும் சாமுண்டி பெட்டா ஆகிய இடங்களை இது உள்ளடக்குகிறது. மொத்தம் 325 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கான கட்டணம், பெரியவர்களூக்கு ரூ.400 ஆகவும், குழந்தைகளுக்கு ரூ.250 ஆகவும் இருக்கிறது.
கூர்கில் உள்ள கொடகின் பசுமையான இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை சுற்றிப்பார்க்க விரும்புவர்களுக்கான சிறப்பான வாய்ப்பு இதுவாகும். இந்த தொகுப்பின் மூலமாக, கோல்டன் டெம்பிள், துபரே காடு, அபே நீர்வீழ்ச்சி, நிசர்கதாமா, ராஜாஸ் சீட் மற்றும் ஹரங்கி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடலாம். இந்த பயணம், மொத்தம் 350 கிலோமீட்டர் தூரம் கொண்டதாக இருக்கிறது. இதில், பெரியவர்களுக்கு ரூ.450 கட்டணமாகவும், குழந்தைகளுக்கு ரூ.300 கட்டணமாகவும் இருக்கிறது.
சுற்றுலா என்றாலே, பலருக்கு பல ஊர்களில் இருக்கும் பல விதமான கோயில்களுக்கு சென்று, சாமி கும்பிடுவதுதான். நீங்கள் அப்படிப்பட்ட ஆளாக இருந்தால், ஆன்மீக பயணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தேவதர்ஷினி தொகுப்பில் கலந்து கொள்லலாம். இதில், வரலாற்று சிறப்புமிக்க கோயில்களை பார்வையிட விரும்புவோர்களுக்கு மகிழ்ச்சிகரமான விஷயங்கள் காத்துக்கொண்டுள்ளன. இந்த தொகுப்பின் மூலமாக, சோமநாதபுரம், ஸ்ரீரங்கப்பட்டணா மற்றும் கே.ஆர்.எஸ் உள்ளிட்ட பகுதிகளுகு செல்லலாம். இந்த பயணம், மொத்தம் 250 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த பயணத்திற்கான கட்டணம், பெரியவர்களுக்கு ரூ.300 ஆகவும், குழந்தைகளுக்கு ரூ.200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட இந்த சுற்றுலா பேருந்துகள் அனைத்துமே, தினமும் சரியாக காலை 6.30 மணிக்கு, மைசூரு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். சுற்றுலா பயணிகள், மைசூரு பேருந்து நிலையத்தில் இருக்கும் முன்பதிவு மையங்கள் மூலமாகவோ, அல்லது KSRTCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ksrtc.karnataka.gov.in மூலமாகவே, தங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தசரா பண்டிகை, இந்த ஆண்டில் வர இருப்பதை அடுத்து, மிகக்குறைந்த செலவில், உங்கள் பயணத்தை கொண்டாடி மகிழ இது மிகச்சிறந்த வழியாகும்.