SBI Pension Loan | எஸ்பிஐ வாடிக்கையாளர்களே உஷார்... பென்ஷன் லோன் வட்டியை அதிரடியாக உயர்த்திய வங்கி
SBI Pension Loan New Rules 2026: அக்டோபர் 15-ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கி ஓய்வூதியக் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.30 சதவீதத்திலிருந்து 11.45 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 76 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தைப் போல 18 மடங்கு வரை (வயது வரம்புக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.14 லட்சம் வரை) அடமானம் இன்றி கடன் பெறலாம். புதிய வட்டி உயர்வின் காரணமாக 5 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதத் தவணை சுமார் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.`
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது ஓய்வூதியதாரர்களுக்கான தனிநபர் கடன் (Pension Loan) விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ரிசர்வ் வங்கி (RBI) தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக உயர்த்தியது. இதன் எதிரொலியாக, அக்டோபர் 15-ஆம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியும் தனது ஓய்வூதியக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
எந்தவித சொத்து அல்லது நகை அடமானமும் இல்லாமல் எளிதாகப் பெறக்கூடிய இந்தக் கடனில், இப்போது எவ்வளவு வட்டி உயர்ந்துள்ளது, உங்கள் வயது மற்றும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக எவ்வளவு கடன் கிடைக்கும், இனி மாதத் தவணை (EMI) எவ்வளவு கூடுதலாகக் கட்ட வேண்டும் என்ற முழுமையான கணக்கீட்டை இங்கே பார்ப்போம்.
எவ்வளவு வட்டி விகிதம் உயர்ந்துள்ளது?
புதிய மாற்றத்தின்படி, மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை (Jai Jawan Pension Loan) ஓய்வூதியதாரர்களுக்கான வட்டி விகிதம் 11.30 சதவீதத்திலிருந்து 11.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருசில பிரிவுகளில் இந்த வட்டி விகிதம் 11.80 சதவீதத்திலிருந்து 11.95 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதத்தில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, கடன் தொகை, வயது வரம்பு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் (6 ஆண்டுகள் /72 மாதங்கள்) ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
யாருக்கெல்லாம் எவ்வளவு கடன் கிடைக்கும்?
இந்தக் கடனைப் பெறுவதற்கு எந்தவித சொத்து ஆவணங்களையோ அல்லது தங்க நகைகளையோ அடமானம் வைக்கத் தேவையில்லை. உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் வயது மட்டுமே இதற்கு அடிப்படைத் தகுதியாகும். 76 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 25,000 ரூபாய் முதல் உங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தைப் போல 18 மடங்கு வரை அதிகபட்ச கடனாகப் பெற முடியும். இருப்பினும், வயது அதிகரிக்க அதிகரிக்க வங்கியின் கடன் உச்சவரம்பு குறையும்.
- 72 வயது வரை உள்ள வழக்கமான ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 14 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.
- 72 முதல் 74 வயது வரை உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரையும், 74 முதல் 76 வயது வரை உள்ளவர்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்படும்.
- குடும்ப ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, வயதுக்கு ஏற்ப 2.5 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
- பொதுவாக 78 வயதுக்குள் முழு கடனையும் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.
எளிமையான கணக்கீடு மூலம் புரிந்து கொள்வோம்
உதாரணமாக, 65 வயதான ஒரு மாநில அரசு ஓய்வூதியதாரர் மாதம் 40,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார் என்றால், அவரது ஓய்வூதியத்தைப் போல 18 மடங்கு கணக்கிட்டால் 7,20,000 ரூபாய் வரை கடன் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
அதேபோல் 75 வயதான ஒரு மத்திய அரசு ஓய்வூதியதாரர் மாதம் 60,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். 18 மடங்கு கணக்கின்படி அவருக்கு 10.80 லட்சம் ரூபாய் வர வேண்டும். ஆனால் அவரது வயது 74 முதல் 76 வரையிலான பிரிவில் வருவதால், வயது உச்சவரம்பின்படி அதிகபட்சமாக 7.5 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் கிடைக்கும்.
மேலும் 78 வயதுக்குள் கடனை முடிக்க வேண்டும் என்பதால், அவருக்கு 36 மாதங்கள் மட்டுமே தவணைக் காலம் வழங்கப்படும். வழக்கமான ஓய்வூதியதாரர்களின் மாதத் தவணை அவர்களின் நிகர ஓய்வூதியத்தில் 50 சதவீதத்திற்கு மிகாமலும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 33 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
புதிய வட்டி உயர்வால் மாதத் தவணை (EMI) எவ்வளவு அதிகரிக்கும்?
6 ஆண்டுகள் (72 மாதங்கள்) தவணைக் காலத்தில் கடன் பெற்றவர்களுக்கு, தற்போதைய வட்டி உயர்வால் மாதந்தோறும் எவ்வளவு கூடுதல் சுமை ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்.
- 2 லட்சம் ரூபாய் கடனுக்கு முன்பு 3,838 ரூபாயாக இருந்த மாதத் தவணை, இப்போது 3,853 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- 5 லட்சம் ரூபாய் கடனுக்கு முன்பு 9,594 ரூபாய் கட்டிய நிலையில், இனி 9,633 ரூபாய் செலுத்த வேண்டும்.
- 7 லட்சம் ரூபாய் கடனுக்கு 13,432 ரூபாயிலிருந்து 13,486 ரூபாயாக மாதத் தவணை அதிகரித்துள்ளது.
- 10 லட்சம் ரூபாய் கடனுக்கு முன்பு 19,188 ரூபாய் செலுத்தியவர்கள், இனி மாதம் 19,265 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
எஸ்பிஐ ஓய்வூதியக் கடன் வட்டி உயர்வு
சராசரியாக 5 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதம் சுமார் 40 ரூபாய் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியுள்ளது. எஸ்பிஐ வங்கியின் யோனோ (YONO) செயலி மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்றோ உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளலாம். மாதத் தவணைத் தொகை உங்கள் ஓய்வூதியக் கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படும்.