2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், திருமங்கலம் சொத்து மேம்பாட்டு திட்டம் அமைந்துள்ளது. இதையடுத்து, இந்த திட்டம் 3,85 ஏக்கர் பரப்பளவில் நான்கு கட்டட கோபுரங்களை கொண்டதாக அமைய இருப்பதாக சென்னை மெட்ரோ அறிவித்திருக்கிறது. இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கியமான போக்குவரத்து சார்ந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் (Transit-Oriented Development - TOD) ஒன்றாக இருக்கும் எனவும் கூறி இருக்கிறது.
சென்னையில் தற்போது மக்களுக்கு பிரதான போக்குவரத்து சாதனமாக இருப்பது, மெட்ரோ ரயில்தான். சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக பூந்தமல்லி முதல் வடபழனி செல்லும் மெட்ரோ ரயிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இன்னொரு புதிய திட்டத்தையும் மெட்ரோ நிர்வாகம் காெண்டு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வழித்தடம் 5-ல் அமைந்துள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தின் இருபுறங்களிலும், மெட்ரோ இரயில் உயர்மட்டப் பாதையை ஒட்டிய வகையில் நான்கு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதில் A மற்றும் C கட்டட கோபுரங்கள் மூன்று அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமையும். B கட்டடக் கோபுரம் தரைத்தளம் மற்றும் ஒன்பது தளங்களைக் கொண்டதாகவும், D கட்டடக் கோபுரம் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களைக் கொண்டதாகவும் அமைக்கப்பட உள்ளன.
திருமங்கலத்தில் மெட்ரோ இரயில் கட்டடத்தின் வழியாகச் செல்லும் வகையில் சொத்து மேம்பாட்டு திட்டம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. #chennaimetro #cmrl #metroupdate https://t.co/5t7Hdd1iZ0
— Chennai Metro Rail (@cmrlofficial) November 12, 2026
இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் அமைந்துள்ள திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையம், B மற்றும் C கட்டடக் கோபுரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த வடிவமைப்புடன் உருவாக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், ஒரே வளாகத்திற்குள் பயணிகள் பொதுப் போக்குவரத்து வசதிகளை எளிதில் அணுகும் வகையில் தடையற்ற இணைப்பு ஏற்படுத்தப்படும்.
இந்த முன்னோடித் திட்டமானது, நிலையான நகர்ப்புற வளர்ச்சி, நவீனப் பொறியியல் சிறப்பு மற்றும் விரிவடைந்து வரும் மெட்ரோ இரயில் வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதிகளை வணிக மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாக முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சாட்டர்ஜி, முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் உதவி துணைத் தலைவர் (வணிக மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல்) ராஜு பன்சோடே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வின் போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொது மேலாளர்கள் எஸ். அசோக் குமார், டி. லிவிங்ஸ்டன் எலியேசர், டாக்டர் டி. ஜெபசெல்வின் கிளாட்சன் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.