சென்னை: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி!! தீபாவளி முடிந்த உடனேயே சென்னையின் சில பகுதிகளில் மக்கள் ஒரு அசவுகரியத்துக்கு ஆளாக நேரிடலாம். வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் முதன்மை குழாய்த்தொடரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளதால், நவம்பர் 11 முதல் நான்கு நாட்களுக்குச் சென்னையின் ஐந்து மண்டலங்களில் குடிநீர் விநியோகம் குறைக்கப்படவுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூருக்கு அருகிலுள்ள மருவாய் கிராமத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் முதன்மை குழாய்த்தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.
இதன் காரணமாக, வடக்குப் பகுதி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (North Water Treatment Plant) தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இதனால், நவம்பர் 11 காலை 6 மணி முதல் நவம்பர் 15 காலை 6 மணி வரை பின்வரும் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்:
குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் குறைந்த அளவில் விநியோகிக்கப்படும் #CMWSSB| #ChennaiMetroWater | @CMOTamilnadu | @TVKVijayHQ | @actorvijay | @GSBediIAS | @TNDIPRNEWS | @tnmaws https://t.co/ZmpGM4k8ZK
— Chennai Metro Water (@CHN_Metro_Water) November 7, 2026
மேலும், நந்தனம், மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 122 முதல் 126 வரையிலான வார்டுகளில் குடிநீர் விநியோகம் குறைக்கப்படும். மேலும், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
ஆகையால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) அறிவுறுத்தியுள்ளது. அவசரத் தேவைகளுக்கு, வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான (https://cmwssb.tn.gov.in) தளத்தில் உள்ள 'Dial for Water' சேவையைப் பயன்படுத்தி குடிநீர் லாரிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இருப்பினும், குழாய் வழி குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தத்துடன் தண்ணீர் வரும் பகுதிகளில், பொதுக் குழாய்கள் மற்றும் சேமிப்புத் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போலத் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.