2026ல் தமிழ் சினிமா பல்வேறு சினிமா பிரபலங்களை இழந்திருக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ் வரிசையில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியும் உயிரிழந்தார். இப்போது அவரது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர்.
மறைந்த நடிகை சவுகார் ஜானகியின் மகள் யாக்னபிரபா. இவருக்கு வயது 76 வயது ஆகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவருடைய பிள்ளைகள், அமெரிக்காவில் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் தனியாக வசித்து
வருகிறார்.
மூதாட்டியான யாக்னபிரபாவிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, காலில் ஏறப்ட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்ததால், அவர் தன் வேலைகளை செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டு இருக்கிறார்.
யாக்னபிரிபா, காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், நடக்க முடியாத சூழலில் இருந்துள்ளார். கூடவே, வீட்டிற்குள் சென்று வர, வீல் சேரை பயன்படுத்தி இருக்கிறார். அக்டோபர் 26ஆம் தேதியான நேற்று, வீட்டிற்குள் இருக்கும் கழிவறைக்குள் செல்ல நினைத்திருக்கிறார். அப்படி செல்கையில், வீல் சேரில் இருந்து தவறி, கீழே விழுந்திருக்கிறார்.
கீழே விழுந்த மூதாட்டி யாக்னபிரபா மீண்டும் வீல் சேரில் ஏறி அமர முடியாமல் தவித்திருக்கிறார். வீடு பூட்டியிருந்திருக்கிறது. இதனால், அந்த வீட்டின் கதவையும் அவரால் திறக்க முடியாமல் போயுள்ளது. தன்னால் எழவும் முடியாமல், உதவிக்கு ஆளையும் அழைக்க முடியாமல் இருந்த யாக்னபிரபா, இக்கட்டான சூழலில் தவித்திருக்கிறார்.
யாக்னபிரபா, பின்னர் எப்படியோ தனக்கு அருகில் இருந்த செல்போனை எடுத்து அதன் மூலம் அருகில் இருக்கும் உறவினரை தொடர்பு கொண்டு, நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
அவருடைய உறவினர், 112 தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்த மூதாட்டி யாக்னபிரபாவை மீட்டுள்ளனர்.
பின்னர், உடனடியாக அவருடைய குடும்ப மருத்துவரை சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைத்து அவருக்கு முதலுதவி சிகிச்சையும அளிக்கப்பட்டுள்ளது.
யாக்னபிரபா, தன் வீட்டில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதால், கதவை திறக்க முடியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மூதாட்டியை துரிதமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு யாக்னபிரபா மற்றும் அவரது குடியிருப்புவாசிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி, கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி உயிரிழந்தார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், உயிரிழக்கும் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு, யாகன்பிரபாவோடு சேர்த்து, சசி ராவ், வெங்கடரமனா சங்கரமாச்சாரி என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இவரது பேத்தியான வைஷ்னவி, தமிழ் சினிமாவில் வா அருகில் வா, நாட்டாமை உள்ளிட்ட சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்திருக்கிறார். 2019 வரை சினிமாவில் ஓரளவிற்கு ஆக்டிவாக இருந்துள்ளார்.