இத்தாலியில் உள்ள பள்ளிகளில், புர்க்கா போடுவதற்கு தடை போடப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் மெலோனி என்ன கூறியிருக்கிறார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் பலர், தங்களுடைய உடலை, அதாவது தலை முதல் பாதம் வரை முழு உடலையும் மறைப்பதற்காக புர்க்காவை (பர்தா) உபயோகிக்கின்றனர். அதே போல, முகத்தை மறைப்பதற்கு நிக்காப்பை உபயோகிக்கின்றனர். இதை, வயது வந்த பெண்கள் முதல் அனைத்து இஸ்லாமிய பெண்களும் உபயோகிப்பர்.
தற்போதைய தகவலின்படி, இத்தாலியில் இருக்கும் பள்ளிகளில் பர்தா மற்றும் நிக்காப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்தாலியில் குடியேற்றம் முக்கியத்துவம் பெற்று வருவதால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்கவும் அந்நாடு தயாராகி வருகிறது.
சமீபத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இளைஞர்களுக்காக ரோமில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அவர்களுக்கு இத்தாலிய மொழி வகுப்புகள் கட்டாயமாக்கப்படும் என்று கூறினார். இது குறித்து பேசிய அவர், “எங்களை பொறுத்தவரை, இத்தாலிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தேடி யார் வந்தாலும், அவர்கள் எங்களுடைய மொழி, கலாச்சாரம், பரஸ்பர மரியாதை மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
Italian PM Giorgia Meloni is planning to ban the burqa and niqab in schools and cap the number of foreign students per class.
The move comes as Meloni seeks to boost her popularity ahead of Italy’s election next year. pic.twitter.com/BvVUFpAvQr— Al Jazeera English (@AJEnglish) September 21, 2026
அவரால் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் சட்டமாவதற்கு, முதலில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் 60 நாட்களுக்குள் நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற வேண்டும்.
இத்தாலியை பொறுத்தவரை, அங்கு ஏற்கனவே வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வகுப்பு அல்லது பள்ளியில் இருப்பதற்கு 30% என்கிற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெலோனி குறிப்பிட்ட இந்த வரம்புகள் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளின் கீழ் வருமா என்பதை விளக்கவில்லை. தற்போது, இத்தாலிய பள்ளிகளில் கிட்டத்தட்ட 12 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இத்தாலியில், இஸ்லாமிய பெண்களால் அணியப்படும் புர்க்காவிற்கு தடை என்பது இதுவரை இருந்ததில்லை. 1975ஆம் ஆண்டு, ஒருவரை கண்டுகொள்ள முடியாத அளவிற்கு ஒரு ஆடையை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டு, மத மற்றும் கலாச்சார காரணங்களுக்காக முழு முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட்டது. அவர்களின் அடையாள சரிபார்ப்புகளின் போது மட்டும் அவர்கள் முகத்தை மூடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டது.
மெலோனியின் கூட்டணிக் கட்சியான, குடியேற்ற எதிர்ப்பு லீக், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற விதிவிலக்குகளுடன், முகத்தை மூடும் ஆடைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கோரும் ஒரு மசோதாவை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், “ஒரு வகுப்பில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மட்டும் இத்தாலிய மொழி தெரியவில்லை என்றால், அந்த குழந்தைக்கு ஆசிரியர் அல்லது சக மாணவர்களால் அம்மொழி கற்றுத்தரப்படும். இருப்பினும், மொழி புரியாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது பெரும்பான்மையாகவோ ஆகிவிட்டால், அது இனி ஒன்றிப்போதல் ஆகாது; அது புறக்கணிப்பு" என்று கூறினார்.
இத்தாலிய குழந்தைகள், வகுப்பறையில் சிறுபான்மையினராக உணரக்கூடாது என்று கூறிய அவர், பள்ளிக்கு வரும் குழந்தைகள் அவர்களின் முகத்தை மூடாமல் வர வேண்டும் என்றும், கற்பனையான ஒரு கலாச்சாரத்தின் பேரில் அந்த பெண் முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டும் எனும் முடிவை யாரும் அவளுக்காக எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மத்தியதரைக்கடல் பகுதியில் இத்தாலி அமைந்துள்ளதால், புலம்பெயர்ந்தோரின் வருகையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஐரோப்பிய நாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இதனால், குடியேற்றம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. இதுவே, எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும், அரசாங்கங்களுக்கு ஒரு தொடர்ச்சியான சவாலாகவும் விளங்குகிறது.