அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது தடைகளை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டு அதைச் சட்டமாக்கியுள்ளார். இதன் மூலம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை அமெரிக்க வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அவரது நிர்வாகம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை, இந்தியா மற்றும் சீனா போன்ற, ரஷ்யாவிடம் அதிகம் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது புதிய வரி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்தச் சட்டம் இரு நாடுகள் மீதும் தானாகவே 100 சதவீத வரியை விதிக்கவில்லை.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு டிரம்ப் அதில் கையெழுத்திட்டார். இந்தச் சட்டம் முறையாக 'லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், 2026' என்று அழைக்கப்படுகிறது. வாஷிங்டனில் உக்ரைனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் நினைவாக இது பெயரிடப்பட்டுள்ளது. அவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் கீவ் பயணத்திலிருந்து திரும்பிய உடனேயே காலமானார்.
அமெரிக்க வரிகள் ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது டிரம்புக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்புநிலையைக் குறைக்கும் நோக்கில், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வரிகளை விதிக்க புதிய சட்டம் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கிறது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வரிகள் மற்றும் நிதிக்குழுவின்படி, இந்தச் சட்டம் ரஷ்யப் பொருட்கள் மீது 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க வழிவகுக்கிறது.
ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல் தொடர்பான விதிகளின் கீழ் வரும் நாடுகளின் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரிகளை விதிக்கவும் இது அனுமதிக்கிறது. இந்த விதிகள் முக்கிய ரஷ்ய எரிசக்தி இறக்குமதியாளர்களையும், எண்ணெய் தடைகளைத் தவிர்ப்பதற்குத் துணைபுரியும் முக்கிய நபர்களையும் உள்ளடக்கியது.
ஆகையால், டிரம்ப் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்த முடிவு செய்கிறாரா என்பதைப் பொறுத்தே அமெரிக்காவின் வரிகள் அமையும்.
அமெரிக்காவின் புதிய வரிகள் இந்தியாவைப் பாதிக்கக்கூடும். ஆனால் இந்தியா மீது 100% வரி விதிப்பு தானாகவே அமலுக்கு வராது.
அமெரிக்காவின் இந்த மசோதாவில் உள்ள இரண்டாம் நிலை வரி விதிப்பு விதிகளின் கீழ், 100 சதவீதம் வரையிலான வரிகளை விதிக்கத் தகுதியான 10 நாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் (Steny Hoyer) ஒரு திருத்தத்தை முன்மொழிந்திருந்தார். இந்த பட்டியலில் உள்ள நாடுகள்:
இருப்பினும், இந்தத் திருத்தம் இந்தியா மீது தானாகவே 100 சதவீத வரியை விதிக்கவில்லை. சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்தால் மட்டுமே, இந்தியப் பொருட்கள் மீது இந்த புதிய அமெரிக்க வரிகள் விதிக்கப்படக்கூடும்.
அந்த கூடுதல் வரிகள் பிப்ரவரி 2026-ல் நீக்கப்பட்டன. அதேவேளையில், இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கட்டமைப்பின் கீழ் பரஸ்பர வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்த மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் புதன்கிழமையன்று நிறைவேற்றியபோது, தனது வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக இந்தியா பதிலளித்தது.
வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்துக் கூறுகையில்,
"ஏற்கனவே பலமுறை கூறியது போல, 140 கோடி மக்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. பல்வேறு மூலங்களிலிருந்து எரிசக்தியைப் பெறுதல் மற்றும் மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியா தொடர்ந்து அதைச் செய்யும்," என்று தெரிவித்தது.
சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் குறித்து பல்வேறு அமெரிக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. "இருதரப்பு உறவு மட்டுமல்லாமல் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து இந்தியத் தரப்பு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது," என்றும் அது குறிப்பிட்டது.
பெரும்பாலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தை ஆதரித்தாலும், மசோதாவிலிருந்து புதிய வரி விதிப்பு அதிகாரங்களை நீக்குமாறு பலர் கட்சித் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வரிகள் விலைகளை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா கையெழுத்தாகியுள்ள நிலையில், தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 100% வரியை விதிக்கிறாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.