அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained
டிசிஎஸ், இன்போசிஸ், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 8 நிறுவனங்களை PERM திட்டத்தில் இருந்து அமெரிக்க அரசு நிறுத்தி உள்ளது. இதனால் இந்திய ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?, ஏற்கெனவே அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் நிலை என்ன? ஆகியவற்றை இங்கு காணலாம்.
PERM Suspension, Explained: அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய ஐடி ஊழியர்களின் நிரந்தரக் குடியுரிமை கனவில் மண்ணள்ளி போடும் வகையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான கிரீன் கார்டு நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் PERM திட்டத்தில் இருந்து மைக்ரோசாஃப்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட எட்டு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு திடீரென இந்த நடவடிக்கையை எடுத்தது ஏன்?, எந்தெந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதிப்புகள் வரலாம்?, ஏற்கெனவே அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் நிலை என்ன? உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க | சவுதி விமான நிலையங்கள் மீது ஹவுதி தாக்குதல்: 3 பேர் பலி... இந்தியா கடும் கண்டனம்
பகுதி 1: தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல்
அக்டோபர் 8ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள 8 முன்னணி நிறுவனங்கள் இதோ:
- மைக்ரோசாஃப்ட் (Microsoft)
- அடோப் (Adobe)
- காக்னிசன்ட் (Cognizant)
- இன்போசிஸ் (Infosys)
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS)
- விப்ரோ (Wipro)
- ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies)
- கேப்ஜெமினி (Capgemini)
பகுதி 2: PERM திட்டம் என்றால் என்ன?
- அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக வசித்து வேலை செய்வதற்கான அனுமதியே பொதுவாக கிரீன் கார்டு (Green Card) என்றழைக்கப்படுகிறது.
- அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பல பிரிவுகளை கடந்து செல்ல வேண்டும். அதில் ஆரம்பத்திலேயே கடக்க வேண்டிய முக்கியமான கட்டம் இந்த Permanent Labor Certification (PERM) ஆகும்.
- இந்த நடைமுறையில் குறிப்பிட்ட பணிக்கு தகுதியான அமெரிக்க பணியாளர்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பதையும்; வெளிநாட்டு பணியாளரை நியமிப்பதால் அமெரிக்கர்களின் ஊதியம் மற்றும் வேலை சூழல் பாதிக்கப்படாது என்பதையும் அந்த நிறுவனம் நிரூபிக்க வேண்டும்.
- அதன் பின்னரே சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பணியாளரின் கிரீன் கார்டு விண்ணப்பத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல முடியும்.
வாசகர்கள் புரிதலுக்கு...
H-1B விசா: அமெரிக்காவில் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் பணிபுரிய உதவும் தற்காலிக வேலைவாய்ப்பு விசா.
PERM: பல வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையாகும்.
கிரீன் கார்டு: அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தைப் பெறுவதற்கான வழியாகும்.
பகுதி 3: அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கை ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறைகள் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்:
- சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களை அதிகளவில் நியமிக்கும் நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
- அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டப்படுகிறது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவில் பணியாளர்களைக் குறைத்தபோதும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா மற்றும் நிரந்தர நடைமுறைகளைத் தொடர்ந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மைக்ரோசாஃப்ட் மற்றும் அடோப் நிறுவனங்கள் மீது நிலுவையில் உள்ள பல்வேறு ஃபெடரல் விசாரணைகளையும் அமெரிக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கான காரணங்களாக தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுகளே ஆகும், அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என கருதக்கூடாது.
பகுதி 4: இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் H-1B போன்ற வேலை விசாக்களில் இருந்து, பின்னர் கிரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த நிறுவனங்களை PERM திட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பதன் மூலம் இந்தியர்களு்ககு மூன்று முக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
விண்ணப்பங்களின் தாமதம்: ஏற்கெனவே PERM நடைமுறையில் உள்ள ஊழியர்களின் நிலுவையில் வைக்கப்படலாம். இதனால் கிரீன் கார்டு பெறுவதற்கான அடுத்தடுத்த கட்டங்களும் தாமதமாகும் வாய்ப்புகள் அதிகம்,
புதிய விண்ணப்பங்களுக்கு சிக்கல்: தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் 8 நிறுவனங்கள் மூலம் கிரீன் கார்டு நடைமுறையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள ஊழியர்கள், இந்த இடைநீக்கம் நீடிக்கும் வரை புதிய PERM விண்ணப்பத்தை தொடங்க முடியாமல் போகலாம்.
விசா காலக்கெடு மீதான கவலை: H-1B விசாவுக்கு வழக்கமாக 6 ஆண்டுகள் காலக்கெடுவாகும். இந்த காலக்கெடுவை நெருங்கும் ஊழியர்களுக்கு இந்த தாமதம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தலாம். கிரீன் கார்டு நடைமுறையின் குறிப்பிட்ட கட்டங்களை அடைந்தவர்களுக்கு சில சூழல்களில் விசா கால நீட்டிப்பு சாத்தியமாகும்.
குறிப்பிட்ட இந்த பாதிப்புகள் ஒவ்வொரு ஊழியரின் விண்ணப்ப நிலை, விசாவின் வகை, இடைநீக்கம் நீடிக்கும் காலம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.
பகுதி 5: தற்போதைய H-1B விசா ரத்தாகுமா?
இந்த 8 நிறுவனங்களை PERM திட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பால், ஏற்கெனவே வழங்கப்பட்ட H-1B விசாக்கள் தானாக ரத்தாகாது.
எனவே, இந்த 8 நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றோ, அவர்களின் வேலை விசா ரத்தாகிவிட்டது என்றோ இதை புரிந்துகொள்ளக்கூடாது. அதேபோல், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட PERM சான்றிதழ்களுக்கு இந்த நடவடிக்கையால் எவ்வித பாதிப்பும் கிடையாது.
பகுதி 6: எத்தனை காலம் நீடிக்கும்?
தற்போதைய அறிவிப்பின்படி, இந்த இடைநீக்கம் எப்போது வரை நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்த 8 நிறுவனங்களும் நீதிமன்றத்தில் இந்த இடைநீக்கத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தவும் அதிக வாய்ப்புள்ளது.
இதனால், அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறத் திட்டமிடும் இந்திய ஐடி ஊழியர்கள் தங்களின் தற்போதைய விசா நிலை, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் மாற்று வேலைவாய்ப்புகள் குறித்து குடியேற்றச் சட்ட நிபுணரிடம் ஆலோசனை பெறுவதே பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறினாலும் விண்ணப்பங்கள் தானாகவே மாற்றப்படாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முடிவுரை
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை நியமிக்கும் நடைமுறைகளில் கட்டுப்பாடு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த 8 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் PERM திட்டத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நேரடித் தாக்கம் கிரீன் கார்டு நடைமுறைகளில் தாமதம் மற்று் புதிய விண்ணப்பங்களுக்கான தடையாக இருக்கும். குறிப்பாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது கவலையை ஏற்படுத்தக்கூடும்.
தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த இடைநீக்கம் நடவடிக்கையின் கால அளவும் அதன் அடுத்தகட்ட சட்டரீதியான விளைவுகளும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும். எனினும் கிரீன் கார்டு நடைமுறையில் ஏற்பட்டுள்ள தடை என்பது வேலை விசாக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டவிட்டன என்ற அர்த்தம் கிடையாது.
மேலும் படிக்க | 2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு... இவர்களின் கண்டுபிடிப்பு என்ன?