Madurai Latest News Updates: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலகிருஷ்ணன் என்ற அந்த நபர் சில நாட்கள் முன்பு உசிலம்பட்டி அருகே ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாக புகாரளிக்க காவல் நிலையம் வந்துள்ளார். புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய செக்கானூரணி போலீசார், விசாரணைக்காக அவரை அழைத்து வந்துள்ளனர்.
காவல் ஆய்வாளர் அறையில் அவரை அமர வைத்துவிட்டு, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் புறப்பட்டுள்ளனர். போலீசார் திரும்பி வந்து பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
(தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுபவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடனடியாக உதவி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (சென்னை): 044-24640050 அல்லது 044-24640060; தமிழ்நாடு அரசின் மருத்துவ உதவி மையம்: 104; டெலி-மானஸ் (Tele-MANAS) உதவி எண்: 14416)
புகாரில் முரண்பாடு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணன் தற்கொலை செய்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புகார் அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதில், "தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான Eicher சரக்கு வாகனத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று அதிகாலை, தேவாரத்தில் இருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, வாலாந்தூர் கண்மாய் கரை அருகே வாகனத்தில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வாகனத்தில் இருந்த சரக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரால் (பாலகிருஷ்ணன்) அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் தற்செயலான தீ விபத்து தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்பாக, பாலகிருஷ்ணன் வழக்குடன் தொடர்புடைய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ய விசாரணை அதிகாரிக்கு உதவ செக்கனூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆரம்பகட்ட தகவலின்படி, உயிரிழந்த நபர் காவல் ஆய்வாளரின் அறையில் இருந்தபோது, காலை சுமார் 6 மணியளவில் கழிவறைக்குச் சென்றவர், கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்று மயக்க நிலையில் இருந்துள்ளார்.
மதுரை மாவட்ட காவல்துறை பத்திரிகை செய்தி. @SouthZoneTNPol #Tnpolice #maduraidistrict https://t.co/9idHPz7vvl
— Madurai District Police (@Maduraidistpol1) November 14, 2026
உடனடியாக அவரை அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. பணியில் இருந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் தொடர்புடைய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில், இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தப்பட உள்ளது என்றும்; மேலும், இவ்வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது என்றும் மதுரை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன் என்றும்; விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? என்றும் உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
— Udhay (@Udhaystalin) November 14, 2026
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்றும்; இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என குறப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தனது துறையில் நடக்கும் அவலங்களுக்கு பொறுப்பேற்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, பஞ்ச் டயலாக் பேசி ஆட்சி நடத்தும் இந்த முதலமைச்சர், மோசமான சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்? என்றும் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சாடி உள்ளார்.