மதுரை பைபாஸ் பகுதியில் உள்ள டாடாவின் தனிஷ்க் நகைக் கடையில் நேற்று (நவ. 12) அதிகாலை 3 மணியளவில் ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 29 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கடையில் இருந்த மொத்த நகைகளில் சுமார் 30% நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட அந்த கடையின் பின்புறம் வழியாக முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் நுழைந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த நகைக்கடையில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
சுவரில் துளையிடப்படாமல், கதவுகள் உடைக்கப்படாமல், பூட்டுகள் உடைக்கப்படாமல் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகின. அந்த நபர் மாடி வழியாக வந்தும் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து டிஸ்பிளேவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில் எஸ்.எஸ்.காலனியில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொள்ளையனை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இதன்மூலம் தகவல் கிடைத்ததை ஒட்டி தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி, ஹைதராபாத்திற்கு விரைந்துள்ளனர்.
நகைக் கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் நகைக்கடை அருகே உள்ள நேரு நகர் வழியாக பழங்காநத்தம் சென்றுள்ளார் என்றும்; அங்கிருந்து முத்துப்பட்டி வழியாக திருப்பரங்குன்றம் வரை குறுகலான பாதை வழியாக சென்று தலைமறைவானதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சிசிடிவி உள்ள பகுதிகளாக கொள்ளையன் காவல்துறையினரை திசை திருப்பி தப்பி சென்றதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் கொள்ளையன் தப்பிச்செல்லும் சிசிடிவி வீடியோவும் வெளியாகி உள்ளது.
நகைக்கடையின் பின்புறம் பகுதியில் உள்ள சுவர்கள், இரும்பு சாரத்தில் உள்ள லிப்ட் கயிறுகள், தண்ணீர் பாட்டில்கள், மாடிப்படிகள், கதவுகள், கைப்பிடிகள், நகை பெட்டிகள் , படிக்கட்டுகள் ஆகியவற்றில் கொள்ளையனின் கைரேகை பதிவாகியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனி நபராக முகமுடி அணிந்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையன் குறித்த எந்தவித தடயமோ, கைரேகையோ கிடைக்காத நிலையில் தடயவியல் நிபுணர்கள் மீண்டும் 2 ஆவது முறையாக துல்லியமாக தடயங்களை சேகரிப்பதற்காக அதிநவீன தடய கருவிகள் மூலமாக தடயங்களை சேகரிக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, கொள்ளை சம்பவம் நடந்த தனிஷ்க் நகைக் கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நகைகளை கொள்ளையடிக்க திருடன் முயற்சி செய்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஒரு வாரம் முன்னரே திருட்டு முயற்சி நடந்தும், அது சிசிடிவி கேமராவில் பதிவாகியும் ஏன் போலீசாரிடம் உரிய புகார் தெரிவிக்கவில்லை என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.