Madurai Tanishq Robbery : மதுரை பைபாஸ் சாலை தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைகடையில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பிரபல இன்ஸ்டா பிரபலமான மீனாட்சி மற்றும் பட்டதாரி இளைஞர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் நிஷாந்த் என்பவரும் யூ-ட்யூபர் என கூறப்படும் நிலையில், அவர்தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. தற்போது தலைமறைவாக உள்ள நிஷாந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மொத்தம் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் 5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
மதுரை பைபாஸ் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை முகமுடி அணிந்த தனிநபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் (நவ. 12) அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொள்ளையனைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. காவல்துறையினர் இரவு பகலாக மணி தொடர்ந்து கடந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரளா, ஹைதராபாத் மற்றும் பொள்ளாசி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றன. 3ஆவது நாளான இன்று கடைப்பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், லிப்ட் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் நகைக்கடைக்கு வருகை தந்து சோதனை மேற்கொண்டனர்.
சம்பவத்தன்று கொள்ளை அடித்துவிட்டு அதிகாலை 3.30 மணிக்கு ஸ்கூட்டியில் கொள்ளையன் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அந்த சிசிடிவி காட்சியில் கொள்ளையன் கருப்பு சட்டை அணிந்து கருப்பு மங்கி குல்லா அணிந்து செல்வது தெரிந்தது.
மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் கிருஷ்ணா என்ற பட்டதாரி இளைஞரின் வீட்டில் காவல்துறையினர் நேற்று (நவ. 13) தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவரது வீட்டில் பதுக்கி வைத்தாரா அல்லது அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் சென்றாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் நேரில் சென்று நிஷாந்த் கிருஷ்ணாவின் வீட்டில் விசாரணை மேற்கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிஷாந்தின் வீட்டில் கிடைத்த தகவல் மாடக்குளம் கண்மாய் சுற்றிலும் போலீஸ் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். பட்டதாரி இளைஞரின் தாய் மற்றும் தந்தையிடம் ஆறு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
நகை கொள்ளை போனதுக்கு பிறகு நிஷாந்த் கிருஷ்ணா அவரது மொபைலில் இருந்து மீனாட்சியை அழைத்து பேசியுள்ளார். அந்த சிக்னல் அடிப்படையில் தற்போது சமூக வலைதள பிரபலம் மீனாட்சியும், நிஷாந்த் கிருஷ்ணாவின் தந்தை சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.