Explainer: கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கி வாங்க மறுத்தால் புகார் அளிப்பது எப்படி? RBI விதிகள் என்ன?
RBI Rules for Torn Notes: ஒரு வங்கி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்தால், பாதிக்கப்பட்ட நபர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? RBI கூறுவது என்ன? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
RBI Rules: கிழிந்த, அழுக்கு படிந்த, சேதமான ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு அதை மாற்ற முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வங்கிகள் கூட அவற்றை ஏற்க மறுக்கின்றனவா? இது பலருக்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. சாதாரண குடிமக்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள், வங்கி கிளைகளில் நாணயங்களை அல்லது சில்லறைப் பணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சூழலை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். ஆனால், வங்கிகள் அப்படி செய்வது சரியா?
இந்திய ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, சட்டப்பூர்வ பணமாக (legal tender) அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களையோ அல்லது ரூபாய் நோட்டுகளையோ ஏற்றுக்கொள்ள எந்த வங்கியும் மறுக்க முடியாது. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செல்லுபடியாகும் அனைத்து நாணயங்களையும் நோட்டுகளையும் அனைத்து வங்கி கிளைகளும் சட்டப்பூர்வமாக கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏதேனும் ஒரு வங்கி ஊழியர் இதைச் செய்ய மறுத்தால், அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். ஒரு வங்கி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்தால், பாதிக்கப்பட்ட நபர் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? RBI கூறுவது என்ன? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
வங்கி அளவில் புகார் அளித்தல்
- வங்கி கவுண்டரில் உள்ள ஊழியர் ஒருவர் நாணயங்களையோ அல்லது நோட்டுகளையோ ஏற்றுக்கொள்ள மறுத்தால், முதல் கட்டமாக அந்த விஷயத்தை கிளை மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
- நடந்த சம்பவத்தைப் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் வழங்க வேண்டும்.
- நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கிளையிலும் அதிகாரப்பூர்வமான புகார் பதிவேடு அல்லது புகார் பெட்டி இருக்க வேண்டும்.
- அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் எழுத்துப்பூர்வ புகாரைப் பதிவு செய்து, அதற்கான ரசீது அல்லது புகார் குறிப்பு எண்ணைப் (complaint reference number) பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இதைத் தவிர, வங்கியின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு (toll-free number) அழைத்தோ அல்லது வங்கியின் இணையதளம் வழியாக டிஜிட்டல் முறையிலோ வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம்.
உயர்மட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தல்
கிளை அளவில் வாடிக்கையாளரின் குறைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது 30 நாட்களுக்குள் வங்கி திருப்திகரமான தீர்வையோ பதிலையோ வழங்கவில்லை என்றாலோ, அவர்கள் இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். வங்கியின் குறைதீர்ப்பு அதிகாரி (Grievance Redressal Officer) அல்லது பிராந்திய நோடல் அதிகாரியிடம் (regional Nodal Officer) எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம். அப்படியும் சிக்கல் தீர்க்கப்படாவிட்டால், வங்கியின் முதன்மை நோடல் அதிகாரியிடம் (Principal Nodal Officer - PNO) முறையாகப் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க | ரயிலில் போன் சார்ஜ் போட இனி கட்டுப்பாடு! ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு..
இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் அளித்தல்
வாடிக்கையாலர் அளிக்கும் புகாரின் மீது வங்கி 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினாலோ, அல்லது அவர்கள் வழங்கும் பதில் திருப்திகரமாக இல்லையென்றாலோ, அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட 'வங்கி குறைதீர்ப்பாளரை' (Banking Ombudsman) நேரடியாக அணுகலாம். இந்த முழு செயல்முறையும் முற்றிலும் கட்டணமில்லாதது. இதற்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- முதலில் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ CMS இணையதளத்திற்கு (cms.rbi.org.in) செல்லவும்.
- அதன் பிறகு, இந்தி அல்லது ஆங்கில மொழியில் நீங்கள் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.
- நீங்கள் ரிசர்வ் வங்கியின் (RBI) உதவி எண் 14448-ஐ அழைத்தும் உதவி பெறலாம்.
அல்லது, உங்கள் எழுத்துப்பூர்வமான புகாரை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்:
Centralised Receipt and Processing Centre,
Reserve Bank of India,
4th Floor, Sector 17,
Chandigarh – 160017
இது போன்ற சூழல்களில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும், ஏதேனும் எழுத்துப்பூர்வமான ரசீதுகள், காணொளி அல்லது ஒலிப்பதிவு ஆதாரங்கள் இருந்தால், அவற்றையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். புகார் அளிக்கும்போது, இத்தகைய ஆதாரங்கள் உங்கள் தரப்பு வாதத்தை வலுப்படுத்த உதவும்.
RBI வழிகாட்டுதல்களின்படி, அனைத்து வங்கிக் கிளைகளும் அழுக்கடைந்த, சேதமடைந்த மற்றும் குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரவும், தேவைக்கேற்ப புதிய நோட்டுகளை வழங்கவும் கடமைப்பட்டுள்ளன. இந்த வசதி பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட வங்கியின் கணக்குதாரர்களுக்கு மட்டும் உரியதல்ல.
அழுக்கடைந்த / சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கான வரையறை என்ன?
அழுக்கடைந்த ரூபாய் நோட்டு என்பது, தொடர்ச்சியான பயன்பாட்டினால் அழுக்கடைந்த நோட்டைக் குறிக்கும். இரண்டு துண்டுகளாகக் கிழிக்கப்பட்டு ஒன்றாக ஒட்டப்பட்ட நோட்டும் இதில் அடங்கும். ஆனால், அந்த இரண்டு துண்டுகளும் ஒரே நோட்டைச் சேர்ந்தவையாகவும், அதில் எந்த முக்கிய அம்சமும் விடுபடாமலும் இருக்க வேண்டும். அத்தகைய நோட்டுகள் வங்கி கவுன்டர்களில் மாற்றுவதற்குத் தகுதியானவையாகவே இருக்கும்.
இந்த விதிகள், சேதமடைந்த நோட்டுகளையும் உள்ளடக்குகின்றன. அதாவது, ரூபாய் நோட்டின் ஒரு பகுதி விடுபட்டிருந்தாலோ அல்லது அந்த நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளால் ஆனதாக இருந்தாலோ, இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் நோட்டுத் திரும்பப்பெறும் விதிகளின் கீழ் மதிப்பீடு செய்வதற்கும் மாற்றுவதற்கும் வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்கலாம்.