PM Narendra Modi - Russian President Vladimir Putin: தலைநகர் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார். அந்த வகையில், பிரிக்ஸ் மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன் டெல்லி பாரத மண்டபத்தில் பிரதமர் மோடிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (செப். 11) நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு அன்பளிப்பாக வழங்கினார். புத்தகத்தை வழங்கும் போது, திருக்குறளின் சிறப்பு குறித்தும், திருக்குறளில் கூறப்பட்ட கருத்துகள் குறித்தும் பிரமதர் மோடி, புதினிடம் தெரிவித்தார்.
அப்போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம், "திருவள்ளுவர் இந்நூலில் மனித வாழ்க்கையின் பல பண்புகளை விவரித்துள்ளார். இந்நூல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்கவும், கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் இந்நூல் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என தெரிவித்தார்.
#WATCH | Delhi | Prime Minister Narendra Modi presented Russian President Vladimir Putin with a Russian translation of the Thirukkural, an ancient Tamil classic.
(Video Source: DD News) pic.twitter.com/IqgVVcIq59— ANI (@ANI) September 11, 2026
பிரதமர் மோடி பலமுறை திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் பொதுவெளியில் பேசியிருக்கிறார். அவரது பல்வேறு உரைகளில் திருக்குறளை மேற்கொள்காட்டி பேசி உள்ளார். அந்த வகையில், தற்போது ரஷ்ய அதிபருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி, திருக்குறளை மேலும் உலகறிய செய்வதில் பிரதமர் மோடி முனைப்பு காட்டி உள்ளார் எனலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட திருக்குறள், 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படும் தமிழின் பழமையான இலக்கிய நூலாகும். மதம், இனம், மொழி உள்ளிட்ட எவ்வித சார்பும் இன்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காக எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள் என்பதால் உலகில் யார் வேண்டுமானாலும் திருக்குறளை வாசித்து, அதன் பொருள் புரிந்து, அதன்படி தங்களின் வாழ்வியலை அமைத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் அறிஞர்கள்.
அறம், பொருள், இன்பம் என முப்பால்கள் கொண்ட திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறல்கள் வீதம் மொத்தம் 1,330 குறல்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட திருக்குறள் தமிழ் மொழியின் பெருமையாக விளங்குகிறது.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தியா - ரஷ்யா இடையேயான இருதரப்பு வர்த்தகம், முதலீடு, எரிச்சக்தி துறை ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பாரத மண்டபத்திற்கு இரு தலைவர்கள் ஒரே காரில் வந்தனர். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இதேபோல் ஒரே காரில் பயணிப்பது இதோடு மூன்றாவது முறையாகும்.
கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் இந்தியா - ரஷ்யா உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். ஆனாலஉக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அவர் நேரில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேஷியா, பிரேசில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.