RBI Latest Update: வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக பணிபுரியும் நபர்கள், வெளிநாட்டிலிருந்து சேவைகளைப் பெறும் நிறுவனங்கள் ஆகியோருக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சேவைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான அந்நியச் செலாவணி விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தளர்த்தியுள்ளது. இது, தனித்தனி ஏற்றுமதி அறிவிப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தைக் குறைப்பதோடு, வங்கிகளுடனான அறிக்கையிடல் நடைமுறையையும் எளிதாக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), சிறு அளவிலான சேவை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்குப் பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இனி, சிறு வணிகங்கள் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான சில அந்நியச் செலாவணி (forex) அறிக்கையிடல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
ஏற்றுமதி அறிவிப்பு படிவம் (Export Declaration Form - EDF) மற்றும் இறக்குமதி தரவு செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Import Data Processing and Monitoring System - IDPMS) தொடர்பான விதிகளில் ரிசர்வ் வங்கி திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தனிநபர் அல்லாத பிற சேவை ஏற்றுமதியாளர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து பெறப்படும் கட்டணம் ₹10 லட்சம் (அல்லது அதற்கு இணையான அந்நியச் செலாவணி மதிப்பு) வரை இருக்கும் பட்சத்தில், இந்தச் சலுகை பொருந்தும். அதாவது, இந்த வரம்பு வரையிலான தொகைகளுக்குத் தனிப்பட்ட EDF தேவையில்லை.
அந்நியச் செலாவணி மேலாண்மை (பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி) (இரண்டாம் திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2026-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரி 13 அன்று வெளியிடப்பட்டு, முன்னதாக செப்டம்பர் மாதத்தில் மாற்றங்களுக்கு உள்ளான அசல் அந்நியச் செலாவணி மேலாண்மை ஒழுங்குமுறைகளில் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து இந்தத் திருத்தங்கள் வந்துள்ளன.
இந்த புதிய விதிகளின் கீழ், "குடியிருப்புத் தனிநபர்" என்பது நிறுவனங்கள் அல்லது பிற வணிக நிறுவனங்களைத் தவிர்த்து, இந்தியாவில் வசிக்கும் ஒரு இயல் நபரைக் குறிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தத் திருத்தப்பட்ட ஒழுங்குமுறைகள், அக்டோபர் 1, 2026 முதல் பின்னோக்கி அமலுக்கு வரும்.