உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படை போன்று உத்தர பிரதேசத்தில் பிராந்தியா ரக்ஷக் தல் உள்ளது. இந்த பிராந்தியா ரக்ஷக் தல் வீரர் ஒருவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது.
அந்த வீரரின் மனைவி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருக்கிறார், அதன்பின் வீடு திரும்பவே இல்லை. வீரரின் மனைவி அவரது முன்னாள் காதலனுடன் ஹர்தோய் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
குடும்பத்தினர் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் அந்த பெண்மணி இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளனர். அப்போது அந்த பெண் அவரது முன்னாள் காதலுடன்தான் இருந்துள்ளார்.
அந்த பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் அழைத்து வந்து குடும்பத்தினர் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினர். அப்போது தனது கணவருடன் தொடர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை என்றும்; முன்னாள் காதலனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அந்த பெண்மணி போலீசாரிடமும், குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்னர் அந்த பெண்ணும் அவரது காதலனும் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர். அப்போது இருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர். பிராந்தியா ரக்ஷக் தல் வீரரை அந்த பெண் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதன் பேரில்தான் திருமணம் செய்துள்ளார் என்றும்; அதேநேரத்தில் திருமணமான பின்னரும் காதலனுடன் தொடர்பில்தான் இருந்திருக்கிறார் என்றும் தெரிவிக்கிறது.
இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன்னுடன்தான் வாழ வேண்டும் என வற்புறுத்தவில்லை. அந்த பெண்ணின் முடிவுக்கு மதிப்பளித்தார்.
தொடர்ந்து இரு தரப்பினரின் சம்மதத்தை தொடர்ந்து, அந்த பெண்ணுக்கும் அவரது முன்னாள் காதலனுக்கும் உள்ளூர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இருவரும் பரஸ்பரம் மாலை மாற்றிக்கொண்டு, அக்னி குண்டத்தை 7 முறை சுற்றி வந்து திருமணம் செய்துகொண்டனர். அந்த பிராந்திய ராக்ஷக் தல் வீரர் முறைப்படி அந்த பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைத்தார்.
உத்தரபிரதேச தலைநகர் மலிஹாபாத் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடன் திருமணமான பெண்ணை, அவள் ஆசைப்பட்டு காதலித்தவருடன் கணவன் சேர்த்து வைத்தது இணையத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்தாண்டு வெளியான 'Dude' திரைப்படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனும், கதாநாயகி மமிதா பைஜூவை அவர் காதலித்தவருடன் சேர்த்துவைப்பதுதான் கதையாகும். இருப்பினும் அதில் ஆணவக் கொலையில் இருந்து நாயகியை காப்பதே பிரதானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.