புதுச்சேரி: பொது இடங்கள் அல்லது தனியார் இடங்களில் அனைத்து வகையான பேனர்கள், பிளக்ஸ் பலகைகள் மற்றும் தற்காலிகக் கட்டமைப்புகளை அமைப்பதற்கும், நிறுவுவதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதுச்சேரி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
வடகிழக்கு பருவமழைத் தொடக்கம், தற்போதைய பருவகாலச் சூழல் மற்றும் உயிர், உடைமை மற்றும் பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான ஏ. குலோத்துங்கன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பட்டணிக்காடி சந்திப்பில் காற்று மற்றும் மழையால் சமீபத்தில் பேனர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தையும், வேறு சில நிகழ்வுகளையும் ஆட்சியர் சுட்டிக்காட்டினார். மேலும், கனமழை மற்றும் பலத்த காற்றின் போது, அனுமதியின்றி மற்றும் தற்காலிகமாக வைக்கப்படும் இத்தகைய பொருட்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன என்றும் அவர் கூறினார்.
பேனர்கள், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற பொருட்களை அமைத்துள்ளவர்கள் அவற்றை உடனடியாக அகற்றுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்த உத்தரவை அமல்படுத்துவதைக் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அல்லது அமைப்புகளால் அகற்றப்படாத பேனர்கள் மற்றும் பிற பொருட்களை அகற்றவும் சிறப்புப் படைகளை அமைக்குமாறு நகராட்சி ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுப்பணித் துறைக்கு இந்த உத்தரவு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை ஆணையம் அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பருவமழை காலம் நெருங்கி வருகின்றது. மழைகாலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இதனால், மனித உயிர்கள், பொருட்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கவும், குறைக்கவும் புதுச்சேரி நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிகளுக்காக நகராட்சி, பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைகப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த வித முன்ன்னறிவிப்பும் இன்றி பேனர்கள் அகற்றப்படும் என்றும், இதற்கு ஆகும் செலவு விதிமீறலில் ஈடுபடும் நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பேனர்கள், ஃப்ளெக்ஸ் பலகைகள் ஆகியவற்றுக்கான தடை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் ராஜா தியேட்டர் சிக்னல் அருகே காற்று மற்றும் மழை காரணமாக, பேனர்கள் சரிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவை ஒழுங்காக கட்டப்படாவிட்டால், மழை காலத்தில் அவை சாலையில் செல்லும் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வடகிழக்கு பருவமழை முடியும் வரை அல்லது இது குறித்த மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.