புதுச்சேரி: புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் பிரிவில் எம்.டி. (M.D.) இறுதியாண்டு படித்து வந்த 26 வயது இளம் பெண் மருத்துவர் யோகலட்சுமி, மயக்க ஊசி செலுத்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி வாசுதேவன். இவரது மகள் யோகலட்சுமி, கல்லூரித் தேர்வுகளுக்காகத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தின் காரணமாக அவர் சோர்வுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய பின்னர், யோகலட்சுமி தூங்குவதற்காகத் தனது அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் யோகலட்சுமி அறையை விட்டு வெளியே வரவில்லை. பெற்றோர் கதவைத் தட்டியும், தொலைபேசியில் அழைத்தும் எவ்விதப் பதிலும் வராததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, படுக்கையில் யோகலட்சுமி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலின் அருகே காலியான மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் இன்சுலின் ஊசி மருந்துகள் இருந்ததை பெற்றோர் கண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல் துறையினர், யோகலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், யோகலட்சுமி ஊசி மூலம் உடலில் மயக்க மருந்து மற்றும் இன்சுலினைச் செலுத்தித் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
அவரது அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் யோகலட்சுமி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
"எனது தற்கொலை முடிவுக்கு நானே பொறுப்பு; இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம். எனது இந்த தவறான முடிவிற்காகப் பெற்றோர் மற்றும் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்"
தேர்வு பயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குடும்ப/தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் பெரியகடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
தற்கொலை எண்ணங்கள் அல்லது கடுமையான மன உளைச்சல் ஏற்படும் நேரங்களில் உடனடியாக மனநல நிபுணர்கள் அல்லது உதவி மையங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 (24 மணி நேரம்)