புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் மோத்திலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அக்டோபர் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில் 80.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் இதுவரை 637 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, டெல்லி மகளிர் மாநாட்டில் அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து பங்கேற்கிறார், ராக் பீச்சில் ஆஸ்திரேலிய ‘ஏ’ கிரிக்கெட் வீரர்கள் உலா வந்தனர். மேலும் புதுச்சேரியின் முக்கியச் செய்திகள் குறித்து பார்ப்போம்.
பாதுகாப்பு ஏற்பாடு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து, 31 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.
ஸ்ட்ராங் ரூம்: இவை லாஸ்பேட்டை மோத்திலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் (Strong Room) வைக்கப்பட்டுள்ளன.
3 அடுக்கு காவல்: சட்டம்-ஒழுங்கு காவலர்கள், அதிரடிப்படை/ஐ.ஆர்.பி.என் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை: வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10% வாக்குகள் பதிவாகியிருந்தன.
தற்போது நடந்த இடைத்தேர்தலில் 80.81% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது பொதுத்தேர்தலை விட 6.29% குறைவு ஆகும்.
ஆட்சியைத் தீர்மானிக்கும் பொதுத்தேர்தல் அல்ல என்பதாலும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்கள் அதிகளவில் வராததாலும் வாக்குப்பதிவு சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டில், புதுச்சேரி அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்து கலந்துகொள்கிறார்.
புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மாநிலத் தேவைகள் குறித்து அவர் பேசவுள்ளார். மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
புதுச்சேரியில் நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்டோக்கள் மூலம் பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி ராக் பீச்சில், குறிப்பாக காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் இருக்கைகள் உடைந்து ஆபத்தான நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
கடந்த வாரம் பராமரிப்பில்லாத மின்கம்பம் சாய்ந்து குழந்தை பலியான சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, உடைந்த இருக்கைகளை உடனடியாகச் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உப்பனாறு வாய்க்கால் பாலம் பணி மற்றும் நகர்ப்புற வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
மழைக்காலம் தீவிரமடைவதற்குள் (அக்டோபர் இறுதிக்குள்) அனைத்து வெள்ள தடுப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்ய வேண்டும் என்றும், அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துத்திப்பட்டில் இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது (2-வது போட்டி அக்டோபர் 9 அன்று நடைபெறுகிறது).
ஓய்வு நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ராக் பீச்சிற்கு உலா வந்தனர். அவர்களை அடையாளம் கண்ட ரசிகர்கள் கைநலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் பகல் நேரத்தில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வரும் நிலையில், அக்டோபர் 7 காலை திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு மழை பெய்தது. மழை நின்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் கடுமையான வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.