Explainer: வெஸ்ட் இண்டீஸ் ODI தொடர்... இந்திய அணிக்கு ஏன் ரொம்ப முக்கியம்...?
IND vs WI ODI Series Explainer: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் இந்திய அணியின் திட்டம் என்ன...? இந்திய அணிக்கு இத்தொடர் ஏன் முக்கியம்...? உள்ளிட்ட தகவல்களை இங்கு விரிவாக காணலாம்.
IND vs WI ODI Series Explainer: மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளும் மூன்று ஓடிஐ மற்றும் ஐந்து டி20ஐ என எட்டு வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட இருக்கின்றன.
2027 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி இன்னும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெறவில்லை என்பது தனிக்கதை.
அந்த வகையில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஓடிஐ தொடர்கள் குறித்தும், இத்தொடர்கள் இரு அணிகளுக்கும் ஏன் முக்கியமானது என்பது குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
ஓடிஐ தொடர் அட்டவணை
| போட்டி | தேதி | நகரம் | நேரம் |
| முதல் ஓடிஐ | செப். 27 (ஞாயிறு) | திருவனந்தபுரம் | மதியம் 2 மணி |
| 2வது ஓடிஐ | செப். 30 (புதன்) | கௌகாத்தி | மதியம் 2 மணி |
| 3வது ஓடிஐ | அக்டோபர் 3 (சனி) | முலான்பூர் | மதியம் 2 மணி |
*ஒவ்வொரு போட்டியின் டாஸ் மதியம் 1.30 மணிக்கு வீசப்படும்.
இரு அணிகளின் ஸ்குவாட்
மேற்கு இந்திய தீவுகள் ஓடிஐ ஸ்குவாட்: ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜான் கேம்ப்பெல், கீசி கார்ட்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜங்கு, அல்சாரி ஜோசப், ஷமார் ஜோசப், விட்டல் லாஸ், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ்.
இந்தியா ஓடிஐ ஸ்குவாட்: சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரர், முகமது சிராஜ், ஆகிப் நபி.
இந்திய அணியில் கவனிக்க வேண்டியவை
அறிமுக வீரர்கள் யார் யார்?
ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் ஆகியோர் ஆசிய விளையாட்டுத் தொடரில் விளையாடுவதற்கு ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் ஓடிஐ அணிக்கு திரும்பி உள்ளனர். நமன் திர், ஆகிப் நபி முதல்முறையாக ஓடிஐ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஹர்திக் அவுட்... நிதிஷ் இன்...
ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக உடற்தகுதி பெறாத நிலையில் அவருக்கு நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்திய அணியில் விளையாட இருந்த நிதிஷ் குமார் அந்த ஸ்குவாடில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டார்.
கேப்அப் யார்...?
பேக்அப் விக்கெட் கீப்பர் பேட்டராக இஷான் கிஷன் பார்க்கப்பட்டார். தற்போது அவர் இல்லாத இடத்தில் ஜூரேல் வாய்ப்பை பெற்றார். ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்தே தற்போது அணியை கட்டமைத்து வருகிறது.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ODI-ல் ஓரங்கட்டப்பட்டது ஏன்...? முக்கிய காரணங்கள்!
பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு?
- ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் ஓபனர்களாக களமிறங்குவார்கள். இருவரும் வலது கை பேட்டர்கள் ஆவர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இவர்களுக்கு பேக்அப் ஆப்ஷனாக இருப்பார். விராட் கோலி நம்பர் 3 இடத்தில் களமிறங்குவார்.
- ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில், அதாவது நம்பர் 4இல் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார். கடந்தாண்டு உள்நாட்டில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் நம்பர் 4இல் களமிறங்கி சதம் அடித்து ருதுராஜ் கவனம் ஈர்த்தது நினைவுக்கூரத்தக்கது.
- நம்பர் 5 பேட்டராக கேஎல் ராகுல் களமிறங்கலாம். முதல் நான்கு பேட்டர்கள் வலது கை பேட்டர்களாக இருப்பதால், இடது கை ஆப்ஷனாக ஜடேஜா நம்பர் 5 பேட்டராக களமிறங்கி, கே.எல் ராகுல் நம்பர் 6 இடத்தில் களமிறக்கப்படலாம். நமன் திர் நம்பர் 7 இடத்திலும், நிதிஷ் குமார் ரெட்டி நம்பர் 8 இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி காம்பினேஷன்
வேகப்பந்துவீச்சில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும்; சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவும் களமிறக்கப்படலாம். இதனால், நம்பர் 8 வரை பேட்டிங் ஆப்ஷன் கிடைக்கும். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி என மூன்று வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும்; குல்தீப் யாதவ், ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும்.
இந்திய அணிக்கு முக்கிய தொடர் ஏன்?
- தென்னாப்பிரிக்காவின் சூழலுக்கும்; பெரும்பாலான ஆடுகளத்தின் பவுன்ஸுக்கும் மணிக்கட்டு ஸ்பின்னர் மற்றும் உயரமான வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியமாகும். எனவே குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பதில் ஆச்சர்யமில்லை. பிரசித் சிறப்பாக செயல்படாவிட்டால் குர்னூர் பிரருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
- அதேபோல், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த ஓடிஐ தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலலும் பங்களிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ருதுராஜ் சிறப்பாக விளையாடினால் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறந்த பேக்அப் ஆப்ஷனாக இருப்பார்.
- எனவே, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த தொடர் என்பது அடுத்து நியூசிலாந்து மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று ஓடிஐ போட்டிகளில் சிறப்பான காம்பினேஷனை அமைக்கவும் உதவும்.
- எனவே, கம்பீர் - கில் காம்போ இந்த தொடரை மிக முக்கியமானதாக கருதி வைட்வாஷ் வெற்றி பெற விரும்பும். இங்கிலாந்து மண்ணில் நடந்த ஓடிஐ தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரலையில் எங்கு காணலாம்?
தொலைக்காட்சியை பொருத்தவரை, Star Sports சேனல்களில் இந்த தொடர் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நீங்கள் வர்ணனையையும் கேட்டு மகிழலாம்.
அதேபோல், Jio Hotstar செயலி மற்றும் இணையத்தளம் வாயிலாகவும் நேரடி ஒளிப்பரப்பை கண்டு களிக்கலாம்.
மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இந்த 3 விஷயங்களை மாற்ற ஜாகீர் கான் அதிரடி திட்டம்!