IPL 2028 : ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள்? வரும் மாற்றங்கள் என்ன? Explained
ஐபிஎல் 2028 தொடரில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கும் சூழலில், 2 புதிய அணிகளை சேர்க்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரிவாக இங்கு அலசலாம்.
ஐபிஎல் தொடர் வரும் 2027ஆம் ஆண்டில் 20வது சீசனை எட்ட உள்ளது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை கடந்து தொடர்ச்சியாக 19 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் இந்தியாவிலும், ஒரு சில சீசன்கள் வெளிநாட்டிலும் நடைபெற்றிருக்கின்றன.
அந்த வகையில் வரும் 2027 சீசனுடன் ஐபிஎல் தொடரின் தற்போதைய சுழற்சி முடிகிறது. அதாவது, 2028 சீசனுக்கு முன் மெகா ஏலம் நடைபெறும், அனைத்து அணிகளும் தங்களின் பெரும்பான்மையான வீரர்களை மெகா ஏலத்திற்கு விடுவிக்கும். ஏலத்திற்கு பின் ஒவ்வொரு அணியிலும் எக்கச்சக்க மாற்றங்கள் நடந்திருக்கும்.
ஐபிஎல் தொடரில் ஏற்பட உள்ள மாற்றங்கள்
அதே வேளையில், ஐபிஎல் தொடரிலும் பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. 2027 தொடருக்கு பின் இம்பாக்ட் வீரர் விதி கைவிடப்படலாம் என்ற பேச்சு தொடர்ந்து இருந்து வருகிறது. அதேபோல், தற்போதுவரை ஒவ்வொரு சீசனிலும் 74 லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன, அது 2028 சீசனில் 94 லீக் போட்டிகளாக உயரும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இவை ஒருபுறம் இருக்க, வழக்கமாக ஐபிஎல் தொடர் மார்ச் கடைசியில் தொடங்கி மே மாதம் இறுதிவரை நடைபெறுகிறது. ஆனால், ஐபிஎல் தொடரை ஜனவரி மாதமே தொடங்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கி உள்ளன. கால்பந்து லீக் தொடர்களை போல் ஐபிஎல் தொடரும் அதிக போட்டியுடன் அதிக நாட்கள் விளையாடப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்
இந்தச் சூழலில், ஐபிஎல் தொடரில் 2028 சீசனில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே 10 அணிகள் பங்கேற்றிருக்கும் சூழலில், தொடரை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
முதல்கட்டமாக, புனே மற்றும் வதோதரா ஆகிய இரு நகரங்களை அடிப்படையாக வைத்து அணிகளை கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும், இருப்பினும் மாற்று யோசனையாக வேறு சில நகரங்களும் ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக...
இதுகுறித்து தகவல் அறிந்தவர்களை மேற்கொள்காட்டி Mint செய்தி தளம் வெளியிட்ட தகவலின்படி, இந்த முன்மொழியப்பட்டிருக்கும் விரிவாக்கமானது, 2028 முதல் 2032 வரையிலான அடுத்த ஐபிஎல் ஊடக உரிமைச் சுழற்சியுடன் ஒத்துப்போகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடரின் மீது உள்நாட்டு வணிகக் குழுக்கள் மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களின் ஆர்வம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு புதிய அணியும் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டைப் பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனே அணிகள்
புனே அணி ஐபிஎல் தொடருக்கு புதிதல்ல. 2011, 2012, 2013 ஆகிய மூன்று சீசன்களிலும் புனே வாரியர்ஸ் இந்தியா அணி பங்கேற்றது. அந்த அணி சஹாரா குழுமத்தால் வாங்கப்பட்டது. உரிமக் கட்டணம் தொடர்பாக பிசிசிஐ உடன் ஏற்பட்ட நிதிப் பிரச்னை காரணமாக, அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது.
பின்னர் சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டபோது குஜராத் லயன்ஸ் அணியுடன் ரைஸ்ஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சேர்க்கப்பட்டது. இந்த அணியை RPSG குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கியிருந்தார்.
இந்த அணி 2016இல் தோனி தலைமையில் 7வது இடத்தில் நிறைவு செய்தாலும், 2017இல் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 2017 இறுதிப்போட்டியில் மும்பை அணியிடம் 1 ரன்னில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவம் பெறும் வதோதரா
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா இந்தியா அளவில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற நகரமாகும். இங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. அதுவும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஹோம் மைதானம் அமைந்துள்ள அகமதாபாத் நகரில் இருந்து வெறும் 110 கி.மீ., தொலைவில்தான் வதோதரா அமைந்துள்ளது.
2022இல் வந்த 2 புதிய அணிகள்
2022இல் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் புதிதாக ஐபிஎல் தொடரில் இணைக்கப்பட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணியை CVC கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. லக்னோ அணியை RPSG குழுமம் 940 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்யிருந்தது. 2023-27 ஊடக உரிமம் 6.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
12 அணிகள் வந்தால் என்னென்ன மாற்றம் வரும்?
- ஐபிஎல் தொடரில் 10 அணிகளுக்குப் பதிலாக 12 அணிகள் இடம்பெற்றால் போட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- இதனால், தற்போதுள்ள 74 லீக் போட்டிகள் பார்மட், 94 போட்டிகளாக உயரக்கூடும். அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதிக நாட்களுக்கு ஐபிஎல் தொடர் நீளும்.
- ஒவ்வொரு அணியும் மாற்ற அணிகளுடன் எத்தனை முறை மோதும் என்ற பார்மட்டிலும் மாற்றங்கள் வரலாம்.
- அதேநேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கான போட்டி கடுமையாகும். எனவே, தற்போதைய டாப் 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது, டாப் 5 அணிகளாக மாற்றமடையலாம். அதாவது முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வகையிலும், இரண்டு எலிமினேட்டர், ஒரு குவாலிஃபயர் போட்டி உடன் பிளே ஆப் பார்மட்டும் மாற்றப்படலாம்.
புதிய அணிகளால் என்ன லாபம்?
- வீரர்களை பொருத்தவரை, இரண்டு புதிய அணிகளால் கூடுதல் இடங்கள் உருவாகி இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்.
- புதிய அணிகளின் வருகையால் பிசிசிஐக்கு அணிகளின் ஏலத் தொகை, ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஊடக உரிமைகள் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
- அதிக போட்டிகள் நடைபெறுவதால் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் விளம்பர வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
- புதிய அணிகள் இடம்பெறும் நகரங்களில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம், விளையாட்டு உள்கட்டமைப்பு, சுற்றுலா, உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் வாய்ப்புள்ளது.
இவை அனைத்தும் தகவலின்படி, ஊகத்தின்படி எழுதப்பட்டவை. புதிய அணிகள் சேர்க்கப்படுவதோ, விதிகளில் மாற்றம் வருவதோ, தொடரின் பார்மட் மாற்றப்படுவதோ, பிளே ஆப் பார்மட் மாற்றப்படுவதோ எ
மேலும் படிக்க | ஐபிஎல் 2027 மினி ஏலம்: CSK, MI விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்!