Asian Games 2026, Men's Cricket: ஆசிய விளையாட்டுத் தொடரின் ஆடவர் கிரிக்கெட் காலிறுதியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
🚨 Match Abandoned 🚨
The #INDvAFG Asian Games 2026 Quarter-Final has been called off due to rain. #TeamIndia advance to the semi-final by virtue of higher seeding. #AsianGames— BCCI (@BCCI) September 28, 2026
ஆசிய விளையாட்டுத் தொடர் தற்போது ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 4ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில் இன்று 10வது நாளாகும். இதுவரை இந்தியா 4 தங்கம், 16 வெள்ளி, 17 வெண்கலம் என 37 பதக்கங்களை வென்று 12வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுத் தொடரில் ஆடவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஹாங்காங், மலேசியா, ஓமன், உள்ளிட்ட அணிகள் தகுதிச் சுற்றில் மோதின. இதில் ஜப்பான் மற்றும் ஓமன் அணிகள் தகுதிச் சுற்றோடு வெளியேறின.
கடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் இம்முறை நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றன. முதலிரண்டு காலிறுதிப் போட்டிகள் இன்றும், பிற இரண்டு காலிறுதிப் போட்டிகள் நாளையும் (செப். 29) நடைபெற இருந்தன.
அந்த வகையில், ஹாங்காங் - பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் - இந்தியா போட்டிகள் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டன. டாஸ் கூட வீசப்படவில்லை. தொடர்ந்து டி20ஐ தரவரிசை அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெற்றன.
வரும் அக். 1ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், அதே நாளில் நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும் மோத இருக்கின்றன.
இலங்கை - நேபாளம் மற்றும் வங்கதேசம் - மலேசியா அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும்.
அரையிறுதி போட்டிகளில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அரையிறுதி போட்டியில் தோல்வியடையும் அணிகள் வெண்கலகத்திற்கான போட்டியில் மோதும். இதில் வெல்லும் அணிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தங்கம் பதக்கமும், தோல்வியடையும் அணிக்கு வெள்ளி பதக்கமும் கிடைக்கும்.
கடந்த முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி இந்த முறையும் தங்கப் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.