போராடி வென்ற தமிழ்நாடு... காப்பாற்றிய ஆன்ட்ரே சித்தார்த் - ரஞ்சி டிராபியில் அசத்தல்
ரஞ்சி கோப்பை தொடரில் சென்னையில் நடைபெற்ற ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திரஜித் மற்றும் ஆன்ட்ரே சித்தார்த்தின் பொறுப்பான ஆட்டத்தால் தமிழ்நாடு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தமிழ்நாடு அணி முதல் மூன்று போட்டிகளில் மொத்தமாக 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
Ranji Trophy 2026-27, TN vs Railways: ரஞ்சி கோப்பை 2026-27 சீசன் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கியது. முதலிரண்டு சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் கடந்த அக். 26ஆம் தேதி தொடங்கியது. எலைட் பிரிவில் 32 அணிகளும்; பிளேட் பிரிவில் 6 அணிகளும் மோதுகின்றன. நாடு முழுவதும் 19 இடங்களில் ரஞ்சி கோப்பை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி மூன்றாவது சுற்றில் ரயில்வேஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மேலும் படிக்க | 39 வருஷமா கப் அடிக்காத தமிழ்நாடு... ரஞ்சி கோப்பை ஜெயிக்க வாய்ப்பிருக்கா?
முதல் இன்னிங்ஸில் போராடிய ரயில்வேஸ்
ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 63.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 8வது பேட்டராக களமிறங்கிய சங்வான் டெயிலண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரயில்வேஸ் அணிக்கு ஆறுதலான ஸ்கோரை கொடுத்தார். ரயில்வேஸ் 51 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது கவனிக்கத்தக்கது. கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்க்கப்பட்டது. சாய் கிஷோர், சோனு யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேம் சுதேசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தடுமாறிய தமிழ்நாடு அணி
கடந்த உத்தரகாண்ட் போட்டியை போல, தமிழ்நாடு அணி பெரிய ஸ்கோரை அடித்து ரயில்வேஸ் அணியை இன்னிங்ஸ் தோல்வியடைய செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரயில்வேஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தமிழ்நாடு அணிக்கு ஷாக் கொடுத்தனர். முதல் நாள் முடிவிலேயே தமிழ்நாடு அணி 71 ரன்களை எடுத்து 3 விக்கெட்டை இழந்தது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இடது கை ஸ்பின்னர் ராஜ் சௌத்ரி பந்துவீச்சில் ஆன்ட்ரே சித்தார்த் 8, அதிஷ் 0, சோனு யாதவ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து சொதப்பினர். கேப்டன் சாய் கிஷோர் 14, அஜித் ராம் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர் இந்திரஜித் மட்டும் ஒருமுனையில் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்தார்.
அரைசதம் அடித்து மீட்ட இந்திரஜித்
9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இந்திரஜித் உடன் ஹேம் தேசுதன் ஜோடி சேர்ந்தார். ஹேம் சுதேசன் 56 பந்துகள் தாக்குபிடித்து 26 ரன்களை சேர்த்து ஆறுதல் அளித்தார். கடைசி கட்டத்தில் 20 ரன்களை சேர்த்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறலாம் என்ற நிலையில், ராஜ் சௌத்ரி பந்துவீச்சில் பாபா இந்திரஜித் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார்.
167 பந்துகளை எதிர்கொண்ட இந்திரஜித் ஒரே ஒரு பவுண்டரி அடித்து 59 ரன்களை சேர்த்தார், இந்திரஜித் தான் தமிழ்நாடு அணிக்காக இப்போட்டியில் அதிக ரன்களை அடித்தவர் ஆவார். தமிழ்நாடு அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஜ் சௌத்ரி 5 விக்கெட்டுகளையும், ஆப் ஸ்பின்னர் தௌஃபிக் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
19 ரன்கள் முன்னிலை பெற்ற ரயில்வேஸ்
19 ரன்கள் முன்னிலையுடன் ரயில்வேஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. குர்ஜப்னீத் சிங் ஓபனர் விவேக் சிங்கின் ஆப் ஸ்டம்ப்பை பதம்பார்த்து விக்கெட் வேட்டையை ஆரம்பித்து வைத்தார். மற்ற விக்கெட்டுகளை தமிழ்நாடு ஸ்பின்னர்கள் கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ரயில்வேஸ் அணி 107 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. ஓபனர் யுவராஜ் சிங் 155 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரியுடன் 42 ரன்களை அடித்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இன்றைய மூன்றாம் நாள் காலையில், ரயில்வேஸ் அணி 9 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 1 ரன்களை அடித்து கடைசி விக்கெட்டை இழந்தது. இதனால் 108 ரன்களுக்கு ரயில்வேஸ் ஆட்டமிழந்தது. சாய் கிஷோர் 4, ஹேம் சுதேசன் 3, அஜித் ராம் 2, குர்ஜப்னீத் சிங் 1 விக்கெட்டை கைப்பற்றினார். 128 ரன்கள் என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது.
டாப் ஆர்டர் சொதப்பல்
ஓபனராக நாராயண் ஜெகதீஷன் உடன் அதீஷ் களணிறங்கினார். இந்த ஜோடி 30 ரன்களை சேர்த்தது. ஆஃப் ஸ்பின்னர் தௌஃபிக் முதல் விக்கெட்டில் தூக்கிய நிலையில், இன்று ஜெகதீஷனை டார்கெட் செய்து தௌஃபிக் பந்துவீசினார். ரவுண்ட் தி ஸ்டம்ப்ஸில் இருந்து தௌஃபிக் வீசிய பந்தை இறங்கி அடிக்க முயன்ற ஜெகதீஷன் போல்டாகி வெளியேறினார். ஜெகதீசன் 12 ரன்களை அடித்திருந்தார்.
ஜெகதீஷன் விக்கெட்டை கைப்பற்றிய ரயில்வேஸ் அணி நம்பிக்கை பெற்றது. ராஜ் சௌத்ரி வீசிய அடுத்த ஓவரில் அதிஷ் 21 ரன்களிலும், தௌஃபிக் வீசிய அதற்கடுத்த ஓவரில் சோனு யாதவ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து 3 விக்கெட்டை தமிழ்நாடு அணி இழந்திருந்த நிலையில், அனுபவ வீரர் இந்திரஜித் மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆன்ட்ரே சித்தார்த் சற்று அவசரம் காட்டினாலும், இந்திரஜித் பொறுமை காட்டினார். சித்தார்த் கொடுத்த கேட்சையும் ரயில்வேஸ் அணி தவறவிட்டது.
இந்திரஜித் - ஆன்ட்ரேவின் முக்கிய பார்ட்னர்ஷிப்
இந்திரஜித் - ஆன்ட்ரே சித்தார்த் ஜோடியை ரயில்வேஸ் அணியால் மதிய உணவு இடைவேளை வரை பிரிக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளையில் தமிழ்நாடு அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது. சித்தார்த் 24 ரன்களையும், இந்திரஜித் 19 ரன்களை சேர்த்திருந்தனர். அடுத்து உணவு இடைவேளைக்கு பின் இந்த ஜோடி 6 ஓவர்கள் தாக்குபிடித்தது.
தௌஃபிக் வீசிய 40வது ஓவரின் கடைசி பந்தில் இந்திரஜித் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பந்து பேட்டில் படவில்லை என இந்திரஜித் தெரிவித்த நிலையில், கள நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் இந்திரஜித் 85 பந்துகளை சந்தித்து 23 ரன்களை அடித்து, கடும் அதிருப்தியுடன் பெவிலியன் திரும்ப நேர்ந்தது. அவர் ஆட்டமிழந்தது ரயில்வேஸ் அணிக்கு மேலும் நம்பிக்கையை அளித்தது.
140 பந்துகளுக்கு பின் பவுண்டரி
இந்திரஜித் ஆட்டமிழந்தபோது தமிழ்நாடு அணி வெற்றிக்கு 39 ரன்களே தேவைப்பட்டது. ரயில்வேஸ் அணி 6 விக்கெட்டை எடுத்தால் வெற்றி என்ற மனநிலையில் இருக்க ஆட்டம் சூடுபிடித்தது. கடந்த உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் 136 ரன்களை சேர்த்த இடது கை பேட்டர் பிரதோஷ் ரஞ்சன் பால், ஆஃப் ஸ்பின்னர் தௌஃபிக்கிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று எல்பிடபிள்யூ முறையில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தை முடித்த ஆன்ட்ரே - விமல் ஜோடி
6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆன்ட்ரே சித்தார்த் - விமல் குமார் ஜோடி நிதானமாக விளையாடி தமிழ்நாடு அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இந்த இன்னிங்ஸில் மொத்தமே 4 பவுண்டர்களே அடிக்கப்பட்டன. அதிஷ் 2, இந்திரஜித் மற்றும் ஆன்ட்ரே சித்தார்த் தலா 1 பவுண்டரியை அடித்தனர். 31வது ஓவரில் இந்திரஜித் அடித்த பவுண்டரிக்கு பின், சுமார் 140 பந்துகளுக்கு பிறகு, 55வது ஓவரில் ஆன்ட்ரே சித்தார்த் பவுண்டரியை அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தை முடிக்க 2 ரன்கள் தேவைப்பட்டபோது, பவுண்டரி அடித்து ஆன்ட்ரே ஆட்டத்தை முடித்துவைத்தார்.
ஆட்டநாயகன் சாய் கிஷோர்
தமிழ்நாடு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி இந்த போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து மொத்தம் 14 புள்ளிகளை பெற்றது. மும்பை - ஹரியானா போட்டியில் யார் தோல்வியடைந்தாலும் தமிழ்நாடு அணி 2ஆம் இடம்பிடிக்கும்.
காலிறுதிக்கு போக பிரகாசமான வாய்ப்பு
இரண்டு இன்னிங்ஸிலும் 7 விக்கெட்டுகளை பெற்ற சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நவம்பர் 2ஆம் தேதி சண்டிகரில் தொடங்கும் போட்டியில் தமிழ்நாடு - சண்டிகர் அணிகள் மோதும். குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றிருக்கும் மும்பை, ஹரியானா அணியை தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி வென்றால் நிச்சயம் காலிறுதிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | தோனி கொடுத்த டிப்ஸ்... பந்துவீச்சில் உதவியது எப்படி? - சாய் கிஷோர் பகிர்ந்த சீக்ரெட்