தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அரசியில் களத்தில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது, 60 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்த இருபெரும் திராவிட வீழ்த்தி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சி ஆதரவுடன் தவெக ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கிடையில், முதல்வர் விஜய் அதிமுக எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை ராஜினாமா செய்து வைத்தார்.
அதன்படி, அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்ஆர் விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, சத்தியபாமா, மரகதம் குமரவேல் வெற்றி பெற்றனர். இதனால், சட்டப்பேரவையில் தவெகவின் பலம் 109 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில், இன்னும் திருச்சி கிழக்கு (விஜய் ராஜினாமா செய்த தொகுதி), கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து இன்னும் 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ”மிக விரைவில் அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள். நேற்றைய தினம் கூட கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டுள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட என்னை, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரே சட்டப்பேரவையில் அமர வைத்தவர் முதல்வர் விஜய். நல்ல வேளை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கினார். யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை ஆனது” எனக் கூறினார்.
எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி வி சண்முகம், லீமா ரோஸ், கோ ஹரி, கே.சி.வீரமணி உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமி அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. செங்கோட்டையன் சொல்வதற்கு ஏற்றார் போல், இபிஎஸ் அதிருப்தி மூத்த நிர்வாகிகள் நேற்று தனியாக ஆலோசனை நடத்தினர். நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில் எஸ்பி வேலுமணி தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்திதயாக தகவல் வெளியானது. இதனால், அதிமுகவில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் என அரசிய்ல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.