முதல்வர் விஜய்யின் தாராபுரம் ரோடு ஷோ... எந்த வழித்தடத்தில்? - முழு விவரம் இதோ
தாராபுரம் தொகுதியில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று தாராபுரம் தொகுதியில் சுமார் 50 கி.மீ., தூரத்திற்கு ரோடு ஷோ மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், அவர் எந்த வழித்தடத்தில் பரப்புரை மேற்கொள்கிறார் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
CM Vijay Dharapuram Road Show Details: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (அக். 6) தேர்தல் வாக்குப்பதிவு ஆகும். இதனால், இன்று (அக். 4) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.
இருத் தொகுதிகளிலும் ஆளும் தவெக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற அதிமுகவும் மீண்டும் தொகுதியை கைப்பற்ற தீவிரமாக பணியாற்றி வருகிறது.
மேலும் படிக்க | மதுராந்தகம், தாராபுரம்: நாளை மாலை முதல் அமலுக்கு வரும் விதிகள் என்னென்ன?
5 முனை போட்டி
அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் களத்தில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறது. நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்கி உள்ளது. மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் கட்சியும், தாராபுரம் தொகுதியில் சிபிஐ கட்சியும் வேட்பாளரை அறிவித்து இடைத்தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது.
2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றிபெற்றனர். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிது நாட்களில் இருவரும் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா தவெகவில் இணைந்தனர். மேலும் அந்த இருவரே தற்போது இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் விஜய்யின் தீவிர பரப்புரை
தவெக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டனர். முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு சென்று பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 2) மதுராந்தகத்தில் 45 கி.மீ., தூரத்திற்கு ரோடு ஷோ மேற்கொண்டார்.
தாராபுரத்தில் முதல்வர் ரோடு ஷோ
அதேபோல், தாராபுரம் தொகுதியிலும் முதலமைச்சர் விஜய் இன்று ரோடு ஷோ மேற்கொள்ள இருக்கிறார். தாராபுரம் தொகுதியில் 50 கி.மீ., தூரம் ரோடு ஷோ மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்திற்கு வருகை தர உள்ளார்.
தாராபுரத்தில் இருந்து அவரது பரப்புரை வாகனம் மூலம் ரோடு ஷோ மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் தவெகவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யின் ரோடு ஷோ குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வறண்டு கிடக்கும் அணைகளும்... தமிழகத்தை நெருங்கும் ஆபத்தும்... Explained
மதியம் 1 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ
அதில், முதலமைச்சர் விஜய் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் மாருதி நகரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்றும்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தெந்த வழித்தடத்தில் ரோடு ஷோ
மாருதி நகர், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல்நிலையம் சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோயில் உள்ளிட்ட வழித்தடத்தில் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
யார் யாருக்கு அனுமதி இல்லை?
முதல்வரின் ரோடு ஷோவின் போது போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ரோடு ஷோவின் போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை என்றும் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் அமலுக்கு வரும்
இந்தப் பிரசாரத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் இரவிலும் ரோடு ஷோ மேற்கொண்ட நிலையில், இன்றைய பரப்புரை மாலை 6 மணிக்கு முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் விதிகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உணவு பார்சல்களில் ஸ்டேப்ளர் பின்களுக்கு அதிரடி தடை: FSSAI அதிரடி உத்தரவு