ஆட்சியை நடத்துவது 3 டம்மி முதல்வர்கள் தான்... CM விஜய்க்கு ஒன்றும் தெரியாது - இபிஎஸ் பேச்சு
முதலமைச்சர் தமிழகத்தை ஆளவில்லை, டம்மி முதல்வர்கள் மூன்று பேர்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர் என்றும் முதல்வருக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக 55வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றம் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கடுமையாக சாடியிருந்தார். அதில் அவர், "சில கட்சிகள் ரீல்ஸ் விடும் கட்சிகளாகும். ரியலாக இருப்பது அதிமுக தான். இந்த கட்சி ஜனநாயக கட்சி, அடி மட்ட தொண்டன் கூட உயர்ந்த இடத்திற்க்கு வர முடியும். உயிரோட்டமுள்ள கட்சியை பலர் உடைக்கவும் முடக்கவும் பார்க்கின்றனர். அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது.
மேலும் படிக்க | CM விஜய் அறிவித்த தீபாவளி பரிசு... அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு DA உயர்வு
அரிசி விலை உயர்வு தான் பரிசு
சில பேர் வேடந்தாங்கல் பறவை போல் பாண்டிச்சேரியை (அமைச்சர் ஆனந்த்) சேர்ந்தவரிடம் சென்று துண்டு வாங்குகின்றனர். அதிமுகவை பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தை நம்பி இல்லை, இப்போது ஆட்சி செய்து வருபவர்கள் மக்களுக்கு என்ன செயதார்கள்...?
செடி முளைத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. என்ன ஆட்டம் போடுகின்றனர் அதிமுக பொன்விழா கண்ட கட்சி இந்த ஆட்சி. வந்து ஆறு மாதத்தில் என்ன கிடைத்துள்ளது, இந்த ஆறு மாதத்தில் மக்களுக்கு கிடைத்த பரிசு, அரிசி விலை உயர்வு.
இந்த ஆட்சியில் ஊழல் இல்லை என கூறுகின்றனர். இது உன்மையா...? எந்த அலுவலகம் சென்றாலும் பணம் இல்லாமல் வேலை நடைபெறுகின்றதா, ஒரு படத்திற்கு வரும் வருமானத்தை விட்டு அரசியலுக்கு வந்துள்ள விஜய், அந்த பணத்தை விட அதிகம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்துள்ளாரா...? 14 ஆயிரம் கோடி சம்பாதித்த விஜய் அதற்கு வரி செலுத்தினாரா...?
கரூர் சம்பவம்
வாராவாரம் சனிக்கிழமை சந்தை போட்டு இருந்தார்கள். அப்போது மாற்று கட்சியில் இருந்து தவெகவில் இணைந்தார்கள். தற்போது அந்த சந்தை மூடப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் விஜய் அவசர அவசரமாக சென்னைக்கு வந்தார். அங்கு என்ன சம்பவம் நடந்தது என விஜய்க்கு தெரியாதா...?
உங்களை நம்பி தான் கரூர் கூட்டத்திற்கு வந்தார்கள். இறந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தாரா முதல்வர் விஜய். கட்சி அலுவலகம் 15 நாட்கள் மூடப்பட்டது. இரண்டாம் கட்சி தலைவர்களும் அப்போது காணவில்லை. கரூர் சம்பவத்தில் பாதிக்கட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதை தவிர்த்து அவர்களை சென்னைக்கு வரவைத்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடரும் மின்வெட்டு பிரச்னை
நேற்று முன்தினம் (அக். 29) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால் மின் தடை, நேற்று (அக். 30) குடியரசுத் துணை தலைவர் சென்ற போதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் ஏழு கட்சிக்கு சென்று வந்துள்ளார், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் தவெக கட்சியில் இருக்கிறார். 20 ரூபாய்க்கு வாங்கும் மின்சாரத்தை 40 ரூபாய்க்கு வாங்குகின்றார், மின்சாரதுறை அமைச்சர், மக்கள் வரிபணம் வீண்.
மேலும் படிக்க | கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்
லஞ்சம் இல்லா சொல்லும் தவெக அரசு, அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவெக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி என்ன...? ஆனால், கட்டுமான பொருட்கள் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒருபுறம் விலைவாசி உயர்வு, மற்றொரு புறம் வேலையில்லா திண்டாட்டம், டாஸ்மாக் பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்வு... இந்த ஆட்சி தூய ஆட்சியா, ஊழல் ஆட்சி...
தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். செஞ்சியில் குழந்தை காணாமல் போய் நீண்ட நாள்களாக ஆகியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. கஞ்சா போதை பொருட்கள் விற்பனையால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.
நாகையில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை கண்டுபிடிக்கவில்லை, மத்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் கொண்டு விற்பனை செய்யும் நிலைமை மாறி தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.
முதல்வர் தமிழ்நாட்டை ஆளவில்லை...
சிறையில் இருந்து கைதிகள் தப்பி செல்வது, தொடர் கதையாக உள்ளது. முதலமைச்சர் தமிழகத்தை ஆளவில்லை, டம்மி முதல்வர்கள் மூன்று பேர்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். முதல்வருக்கு ஒன்றும் தெரியாது. ஆறு மாதத்தில் செய்தியாளர்களை சந்திப்பு நடந்துள்ளதா...?
ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால் தவெக ஆட்சிக்கு வந்து இருக்காது. ஜனநாயக பட தயாரிப்பாளர் டெல்லி பிரதிநிதியா... அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மதுராந்தகம் இடைதேர்தல் நடைபெற்றது.
சொத்தை எழுதி வைப்பாரா விஜய்?
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போல் நமது சட்டமன்ற உறுப்பினர் பறந்து சென்றார். மதுராந்தகத்தில் முகத்தை காட்டாமல் ஆடு மேய்தார், டீ குடித்தார், தெரு தெருவாக சுற்றினார் முதல்வர் விஜய். மதுராந்தகத்தில் பணம் கொடுத்துதான் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றார். எத்தனை கூட்டணி கட்சிகள் இருந்தும், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
முதல்வர் விஜய் வீடு அருகே தலைமை செயலகம் கட்ட வேண்டுமா...? ஏற்கனவே தமிழகம் கடனில் உள்ளது. முதல்வர் அறை போதிய அளவில் இல்லையாம், பல முதல்வர்கள் பயன்படுத்திய அறை. தற்போதைய முதல்வர் விஜய்க்கு அந்த அறை தேவையில்லையாம். கொடுத்து கொடுத்து சிவந்த கரமான எம்ஜிஆர் தனது சொத்துகளை பிறருக்கு எழுதி வைத்ததுபோல் விஜய் எழுதி வைப்பாரா...?
ஆதவ் அர்ஜுனாவால் பிரச்னை
முதல்வர் விஜய் எங்கு சென்றாலும் தனி விமானம்தான். நாங்கள் மக்களோடு மக்களாக இருந்தோம், மக்களின் வரி பணம் பணத்தை சுய லாபத்திற்க்காக செலவு செய்வது ஏற்றுகொள்ள முடியாது. தவெக கட்சிக்கு பெரிய தியாகம் செய்தது போல் பேசி வருகிறார், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. திமுக, விசிக கட்சிக்கு பிறகு அதிமுகவில் பதவி கேட்டார். பதவி தரவில்லை என்பதால் தவெக கட்சிக்கு சென்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவால், அனைத்தும் பாதியில் நிற்கின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய டென்டர் அறிவிக்கவில்லை. தார், ஜல்லி, கூலி, எம்.சாண்டு விலை உயர்வு. மின்சாரதுறை போல் பொதுப்பணிதுறை அமைச்சர் எதுவும் தெரியாமல் இருந்து வருகின்றார். தற்போது தமிழகம் போராட்டகளமாக மாறியுள்ளது. வேறு யாரும் இந்த ஆட்சியை கவிழ்க்க தேவையில்லை. தவெக கட்சியினரே கவிழ்த்துவிடுவார்கள்.
மேலும் படிக்க | "கேடுகெட்ட துப்பில்லாத வக்கில்லாத ஆட்சி" வேக்கப் விஜய் - கனிமொழி எம்பி