SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஒட்டுண்ணி காய்ச்சல் அறிகுறிகள் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? – சுகாதாரத்துறை எச்சரிக்கை

Scrub Typhus : தமிழ்நாட்டில் பரவும் ஒட்டுண்ணிக் காய்ச்சல் குறித்த அறிகுறிகள், தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை.

Written By Karthikeyan Sekar
Published: Oct 13, 2026, 07:52 AM IST | Updated: Oct 13, 2026, 08:00 AM IST
Join

Scrub Typhus : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல்கள் மற்றும் எலி, பூச்சிகளால் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ், ஒட்டுகண்ணி காய்ச்சல் (Scrub Typhus) போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறைகள், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த தடுப்புப் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.  

மேலும் படிக்க | பெண்கள் தொழில் தொடங்க ரூ.3.5 லட்சம் மானியம், நிலம் வாங்க நிதி உதவி – அரசின் முக்கிய அறிவிப்பு Explained

ஒட்டுகண்ணி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?

ஒட்டுகண்ணி காய்ச்சல் என்பது 'ஓரியன்சியா சுசுகாமுஷி' என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இது 'டிராம்பிகுலிட் மைட்ஸ்' (Trombiculid mites) எனப்படும் மிகச்சிறிய மென் உண்ணிகளால் (புழு/பூச்சிகள்) மனிதர்களுக்குப் பரவுகிறது. இத்தகைய உண்ணிகள் பொதுவாக எலிகளின் மேல் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் இந்நோய் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு இந்நோய் நேரடியாகப் பரவாது. மென் உண்ணி கடித்ததிலிருந்து நோயின் அறிகுறிகள் வெளிப்பட பொதுவாக 10 முதல் 12 நாட்கள் ஆகலாம். மேலும், பூச்சி கடித்த இடத்தில் கருப்பு நிறத்தில் 'எஸ்கார்' எனப்படும் தழும்பு அல்லது கொப்புளம் போன்ற காயம் ஏற்படும்.  

காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் ஆபத்துகள்

இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு திடீர் தீவிரக் காய்ச்சல், குளிர் நடுக்கம், கடுமையான தலைவலி, உடல் வலி மற்றும் நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் ஆகியவை உண்டாகும். சிலருக்கு வாந்தி, இருமல் மற்றும் உடலில் சிவப்பு நிற தடிப்புகளும் ஏற்படலாம். இந்நோய்க்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நுரையீரல் அழற்சி, மூளை சவ்வு அழற்சி, இதய தசை அழற்சி போன்ற தீவிரப் பாதிப்புகள் உருவாகலாம். மேலும் உள்உறுப்புகள் செயலிழத்தல், கோமா நிலை மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நோயைக் கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை வசதிகள் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேதாரண்யம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளன.  

பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

ஒட்டுகண்ணி காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

* புல்வெளிகள், புதர்கள் நிறைந்த பகுதிகளில் தேவையின்றி உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.   
* வீடுகள் மற்றும் கட்டிடங்களைச் சுற்றியுள்ள வேண்டாத புதர்கள், செடிகளை முறையாக அகற்றி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.   
* எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த எலிப்பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை அழிக்க வேண்டும்.   
* அதிக புதர்கள் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், புல்வெளிகளில் படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.  

மென் உண்ணிகள் கடிக்க வாய்ப்புள்ள தோட்ட வேலைகள் அல்லது புதர்கள் உள்ள இடங்களுக்குச் செல்பவர்கள், உடலை முழுமையாக மூடும் முழுக்கைச் சட்டைகள் மற்றும் முழுக்கால் சட்டைகளை அணிந்து கொள்ள வேண்டும்.  

பொதுமக்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | நாகப்பட்டினம் : சிறப்பு பாஸ்போர்ட் முகாம்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES