கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுடனான சிறப்புக் கலந்தாய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
வேளாண் துறை சார்ந்த அனைத்து அரசு நலத்திட்டங்களுக்கும் விவசாயிகள் அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள மீதமுள்ள 25,448 விவசாயிகளுக்கும் மிக விரைவாக அடையாள எண் வழங்கி, பதிவுகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். இப்பணிகள் அனைத்தையும் வரும் அக்டோபர் 31 (31.10.2026) ஆம் தேதிக்குள் எவ்வித சுணக்கமும் இன்றி முழுமையாக முடித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்னணு பயிர் கணக்கெடுப்புப் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்னரே விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியினை வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், வருவாய்த் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படவும், தன்னார்வலர்களை அதிக அளவில் களப்பணியில் ஈடுபடுத்தி கணக்கெடுப்பை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயற்கை பேரிடர்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் விவசாயிகள் நிதி இழப்பைத் தவிர்க்கும் வகையில் பயிர் காப்பீடு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. அனைத்து கிராமப் பகுதிகளிலும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பருத்தி, மக்காச்சோளம் மற்றும் நெல் பயிர்களுக்கான பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, வேளாண்மை துணை இயக்குநர் (திட்டங்கள் - பொறுப்பு) பொன்னுராசன் மற்றும் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.