கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்..தலைமை செயலாளர் மீது உதயநிதி ஸ்டாலின் புகார்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பணியிடத்தில் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவாகரம் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்டத்தின் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், கடந்த ஜூலை மாதமே ஆட்சியர், தலைமை செயலாளருக்கு புகார் அளித்தும் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் கேள்வி எட்டுத்திக்கிலும் எழுந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் புகார்..!
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் குற்றத்தை மறைத்த தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஜூலை மாதமே தலைமை செயலாளரிடம் புகார் அளித்த நிலையில், குற்றத்தை மறைத்த தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரில் குறிப்பிட்டுள்ளது என்ன..?
உதயநிதி ஸ்டாலின், இரு தவெக எம்.எல்.ஏக்களை தன் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஓன்று அருள் விக்னேஷின் விவகாரம், இன்னொன்று துணை சபாநாயகர் ரவி ஷங்கரின் விவகாரம்.
தன் புகாரில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் மொபைல் போன் மற்றும் அனைத்து எலக்ட்ரானிக் அதாரங்களையும், ஆட்சியர் வீட்டு சிசிடிவி ஆதாரங்களையும் சேகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தன் புகாரில், கவிதா ராமுவின் பதிவு குறித்தும் குறிப்பிட்டிருக்கும் அவர், அதில் தலைமை செயல் அதிகாரி பாதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு பணிமாறுதல் வழங்குவதாக கூறியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அழுத்தத்தால் இந்த பதிவு நீக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளர்.
சிடிஆர் நிர்மல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சிடிஆர் நிர்மல் குமார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் குறித்து பேசியவர்களை விமர்சித்ததோடு, இந்த விஷயம் முன்னரே தலைமை செயல் அதிகாரிக்கு தெரியும் என்பதை அவர் பொதுமக்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதனால், பொதுமக்களை திசை திருப்பும் வகையில் பேசியதற்காக, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தன் புகாரில் கோரிக்கை வைத்துள்ளார்.
ரவி ஷங்கர் பிரச்சனை..!
திருச்சியில், கார்த்திக் குமார் என்பவர், அந்த தொகுதியின் எம்.எல்.ஏவான ரவி ஷங்கரிடம் சென்று தண்ணீர் பிரச்சனை தொடர்பாக புகார் தெரிவித்ததாகவும், அப்போது தான் தாக்கப்பட்டதாகவும் ஒரு வீடியோவில் கூறியிருந்தார். இதனை தன் புகாரில் சுட்டிக்காட்டிய உதயநிதி, அவர் மீதும் நடவடிக்கை எடூக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பு..!
புகாரளித்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள சிங்கப்பெண் படைக்கு என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள்..? என்று கேட்டார். பின்னர், முதல்வர் விஜய்யால் துவங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடி படையை யாரேனும் பார்த்ததுண்டா..? என்றும் கேள்வி எழுப்பினார்.
டிஜிபி கூறியது என்ன..?
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு குறித்து, டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், நேர்மையாக இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் கூறியிருக்கிறார்.