தொழில் முதலீடு போட்டோ வரவில்லை... வேற போட்டோ தான் வந்தது - CM விஜய்யை தாக்கிய இபிஎஸ்
Edappadi Palanisamy: முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் அவர் முதலீட்டை ஈர்க்கும் புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் வேறு புகைப்படங்கள்தான் வெளியாகி உள்ளன என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Edappadi Palanisamy Slams CM Vijay : திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் சிவக்குமாரின் இல்லத் திருமண விழா நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய பின்னர் மேடையில் இபிஎஸ் உரையாற்றினார்.
திருமண விழாவில் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவரிடம் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முதலீட்டை ஈர்க்கும் புகைப்படம் வரவில்லை
"முதலமைச்சர் விஜய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என என பத்திரிகை, ஊடகங்கள் வாயிலாக செய்தி தெரியவந்தது. ஆனால் அவர் லண்டன் போனதில் இருந்து தொழில் முதலீட்டை ஈர்க்கின்ற எந்த செய்தியும் இதுவரைக்கும் வரவில்லை.
ஆனால், பத்திரிக்கையில் இன்றைக்கு வேறு புகைப்படம் வந்துள்ளது. அதுதான் ஏற்கெனவே நான் நிகழ்ச்சியில் பேசினேன். தொழில் முதலீட்டை ஈர்க்கக் கூடிய கூட்டத்தில் கலந்துகொண்டு அந்த புகைப்படம் இதுவரைக்கும் வரவில்லை. ஆனால், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்...?
அந்த நிகழ்ச்சியின் உடைய புகைப்படம் வெளியில வந்துள்ளது, இதுதான் இப்போதைய செய்தி. எனக்கு அதை பற்றி தெரியாது, நான் பார்க்கவில்லை. அதனுடைய செய்தியை நான் பார்க்கவில்லை. பார்த்தால்தான் தகவல் சொல்ல முடியும், செய்தியை நான் பார்க்கவில்லை" என்றார். முதலமைச்சர் விஜய் லண்டன் சென்ற பின்னர் முதலீடு ஈர்ப்பது குறித்த புகைப்படங்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
அதேநேரத்தில் லண்டன் சில்வர்ஸ்டோனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. கடந்த செப். 10 இரவு அன்று லண்டன் புறப்பட்ட விஜய், வரும் செப். 17ஆம் தேதி நாடு திரும்ப உள்ளார்.
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்...
தொடர்ந்து இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, "இரண்டு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி ஒன்று, இன்னொன்று தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி. இரண்டும் அதிமுக வெற்றிபெற்ற தொகுதி. ஆக இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது" என்றார்.
மேலும், "மீண்டும் அதிமுக அரசு அமைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளில் மக்கள் அதிமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்தனர். ஆனால் குதிரை பேரத்தினர் வழியாக அவர்கள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு எப்படி போனார்களோ அப்படி போனார்கள். எல்லா பத்திரிகை ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கும்.
மேலும் படிக்க | ரேஸ் பார்க்க வந்த திரிஷா... பச்சைக்கொடி காட்டிய CM விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் கார்
அதனால்தான், இப்போது தேர்தலை சந்திக்கிறோம். அவர்களையே தவெக வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. நிச்சயமாக மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள். அதிமுக வெற்றிபெறும்" என்றார்.
தவெக ஆட்சியில் தொடரும் போராட்டம்...
தொடர்ந்து தவெக அரசின் ஆட்சி குறித்தும், நிலவும் தொடர் மின்வெட்டு பிரச்னை குறித்தும் அவர், "ஒரு மோசமான ஆட்சியைத் தான் பார்க்கிறோம். இந்த 100 நாட்களில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. துன்பம்தான் இந்த ஆட்சியில் கிடைத்திருக்கிறதே ஒழிய நன்மை கிடைக்கவில்லை.
விவசாயிகளின் போராட்டம், செவிலியர்களின் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம், பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம், இப்படி ஆட்சி தொடங்குனதில் இருந்து இன்று வரைக்கும் போராட்டத்தைதான் இந்த ஆட்சி சந்தித்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியிருந்தால் எதற்கு விவசாயிகள் போராட்டம் செய்யப்போகிறார்கள்...?
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு
ஆக இந்த ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையில் இல்லை என்ற காரணத்தினால்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஊடகங்களில் ஒரு செய்தியைப் பார்த்தேன், திருநெல்வேலி மாவட்டத்தில் இரவில் 10 நாட்களாக மின்தடை ஏற்படுவதால் அங்கு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று அந்த பகுதியில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள் என பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி வந்து சாலையிலேயே மறியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். கடுமையான மின்வெட்டு நிலவிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் தமிழ்நாடு அரசு சீர் செய்யவில்லை.
பலமுறை நாங்கள் சட்டப்பேரவையிலேயே பேசினோம். அறிக்கையாகவும் வெளியிட்டோம். ஆனால் இன்று தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு நிலவிக் கொண்டிருக்கிறது, இதை அனைவரும் அறிவார்கள்" என கூறினார்.