8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை விதிகளில் மாற்றம் வருமா? வரம்பு அதிகரிக்குமா?
8th Pay Commission: புதிய ஊதியக் குழுவால் கிராச்சுவிட்டி தொகையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? கிராச்சுவிட்டி தொகை அதிகரிக்குமா? வரி விலக்கு வரம்பு திருத்தப்படுமா?
8th Pay Commission Gratuity: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இது ஒரு முக்கியமான தருணம். இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளியாகும். அதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு அவர்களது மொத்த சம்பள அமைப்பிலும் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது. ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நிதி நன்மைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் பணிக்கொடையிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பணிக்கொடை என்றால் என்ன?
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது வழங்கப்படும் 'கிராச்சுவிட்டி' (Gratuity) எனப்படும் பணிக்கொடை, ஊழியர்களுக்குக் கிடைக்கும் மிக முக்கியமான மொத்தத் தொகையாகும். இந்தத் தொகை, பணியாளரின் மொத்தப் பணி ஆண்டுகள் மற்றும் அவர் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 8வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பணிக்கொடை தொடர்பான முக்கிய சில கேள்விகள் எழுகின்றன:
- புதிய ஊதியக் குழுவால் கிராச்சுவிட்டி தொகையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?
- கிராச்சுவிட்டி தொகை அதிகரிக்குமா?
- வரி விலக்கு வரம்பு திருத்தப்படுமா?
கிராச்சுவிட்டி கணக்கிடும் முறை, 5 ஆண்டு பணி விதி மற்றும் 25 லட்சம் ரூபாய் வரையிலான வரி விலக்கு வரம்பு குறித்த எளிமையான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
கிராச்சுவிட்டி கணக்கிடும் முறை என்ன?
கிராச்சுவிட்டி தொகையைக் கணக்கிடும் முறை மிகவும் எளிமையானது: ஊழியரின் இறுதி அடிப்படை ஊதியம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance - DA) ஆகியவற்றைக் கூட்டி, அதை 15-ஆல் பெருக்கி, 26-ஆல் வகுத்து, பின்னர் மொத்தப் பணி ஆண்டுகளால் பெருக்க வேண்டும். அதாவது,
கிராச்சுவிட்டி = (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) × 15 / 26 × பணி ஆண்டுகள்.
இந்தச் சூத்திரத்தில் உள்ள '26' என்ற எண், ஒரு மாதத்தில் உள்ள பணி நாட்களைக் குறிக்கிறது. கிராஜ்ஜுவிட்டி கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் இறுதி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் கூடுதல் 80,000 ரூபாய் என்றும், அவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் என்றும் வைத்துக்கொண்டால், அவருக்குக் கிடைக்கும் கிராச்சுவிட்டி தொகை சுமார் 13,84,615 ரூபாயாக இருக்கும். இது ஒரு உதாரணம் மட்டுமே; ஒவ்வொரு ஊழியரின் ஊதியம் மற்றும் பணி காலத்தைப் பொறுத்து உண்மையான தொகை மாறுபடும்.
பணிக்கொடையில் 5 ஆண்டு விதி என்றால் என்ன?
- கிராச்சுவிட்டி பெறுவதற்கு, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
- 5 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே பணியிலிருந்து விலகினால், அந்த ஊழியருக்குக் கிராச்சுவிட்டி பெற உரிமை இல்லை.
- இருப்பினும், பணியின் போது மரணம் அல்லது ஊனம் ஏற்படும் சூழல்களில் இந்த விதி பொருந்தாது.
- அத்தகைய நேரங்களில், ஊழியரின் குடும்பத்தினர் கிராச்சுவிட்டி பலனைப் பெற முடியும்.
- மேலும், பணி காலத்தில் முழுமையாக நிறைவடைந்த 6 மாத காலமும் கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படும்.
- எனவே, ஓய்வு பெறும் குறிப்பிட்ட தேதியும் இறுதி கிராச்சுவிட்டி தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
எனினும், சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-இன் கீழ், ஃபிக்ஸ்ட் டர்ம், அதாவது, நிலையான கால ஊழியர்கள் 1 ஆண்டு தொடர்ச்சியான சேவையை நிறைவு செய்த பிறகு, விகிதாசார அடிப்படையில் பணிக்கொடை பெறத் தகுதி பெறுவார்கள்.
25 லட்சம் ரூபாய் வரையிலான வரி விலக்கு வரம்பு என்றால் என்ன?
மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, கிராச்சுவிட்டி தொகையில் 25 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. முன்பு இந்த வரம்பு ரூ. 20 லட்சமாக இருந்தது, ஆனால் அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தைத் தாண்டியவுடன், இது ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இதன்படி, ரூ. 25 லட்சம் வரையிலான பணிக்கொடை (Gratuity) தொகைக்கு வரி விதிக்கப்படாது. பணிக்கொடைத் தொகை ரூ. 25 லட்சத்தைத் தாண்டினால், அந்த கூடுதல் தொகைக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படி வரி விதிக்கப்படலாம்.
8வது ஊதியக் குழு பரிந்துரைகளில் பணிக்கொடை விதிகளில் மாற்றம் இருக்குமா?
ஊதியக் குழு, அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதன் மூலம் பணிக்கொடையின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் போது, பணிக்கொடையைக் கணக்கிடும் சூத்திரத்தில் பயன்படுத்தப்படும் ஊதியக் கூறின் மதிப்பும் உயர்கிறது. இதனால் பணிக்கொடைத் தொகையும் தானாகவே அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உதாரணமாக, புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அடிப்படை ஊதியம் உயர்ந்தால், அதே பணி காலத்திற்கு முந்தையதை விட அதிக பணிக்கொடை கிடைக்கக்கூடும். இருப்பினும், இது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே நிகழும்; இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
வரிவிலக்குக்கான பணிக்கொடை வரம்பில் மாற்றம்
சில பணியாளர் அமைப்புகள், வரி விலக்கு அளிக்கப்படும் பணிக்கொடை வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும், இது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த வரம்பு உயர்த்தப்படுமா இல்லையா என்பது முற்றிலும் அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே அமையும்.
எனவே, வெறும் விவாதங்கள் அல்லது கோரிக்கைகளின் அடிப்படையில் பணிக்கொடை குறித்து எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. ஓய்வு பெறவிருக்கும் பணியாளர்கள், எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் முன்பாக, தங்கள் துறையிடமிருந்து பணிக்கொடை கணக்கீடு மற்றும் அது தொடர்பான வரம்புகள் குறித்த எழுத்துப்பூர்வமான தகவல்களைப் பெற்றுக்கொள்வது நல்லது.
8வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமலுக்கு வந்த பின்னர், பணிக்கொடை விதிகளில் மாற்றங்கள் வரக்கூடும், வராமலும் போகலாம். பணிக்கொடை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக, ஊழியர்கள் தங்கள் துறை, கணக்குப் பிரிவு அல்லது தொடர்புடைய அலுவலகத்தில் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம். இதன் மூலம், ஓய்வு பெறும் காலத்தில் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.