DA Hike, DA Arrears: தீபாவளிக்கு முன்னதாக, நேற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் செய்யப்பட்டுள்ள இந்த உயர்வுக்கு பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் 60% -இலிருந்து 63% ஆக அதிகரித்துள்ளது.
அகவிலைப்படியில் (Dearness Allowance) ஏற்பட்டுள்ள இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியைக் கொண்டுவந்துள்ளது. டிஏ மற்றும் டிஆர் -க்கான புதிய விகிதங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஏ உயர்வு (DA Hike) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்பதால், ஊழியர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை கிடைக்கும். உதாரணமாக அடிப்படைச் சம்பளம் ₹18,000 கொண்ட ஒரு ஊழியருக்கு, 3% டிஏ உயர்வு மாதத்திற்கு கூடுதலாக ₹540-க்கு சமமாகும். நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்தால், அந்த ஊழியர் தனது வரவிருக்கும் சம்பளத்துடன் கூடுதலாக ₹,2160-ஐப் பெறுவார்.
டிஏ அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய நிலையை பொறுத்து மாறுபடும். ஊதிய நிலையின் (Pay Level) அடிப்படையில் ஊழியர்களுக்கு எவ்வளவு டிஏ அரியர் தொகை கிடைக்கும் என இங்கே காணலாம்.
நிலை 1 முதல் நிலை 18-இல் உள்ள ஊழியர்களுக்கான டிஏ அரியர் தொகை
| ஊழியரின் ஊதிய நிலை (Pay Level) | குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (Basic Salary) | மாதாந்திர அகவிலைப்படி உயர்வு (DA Hike) | 4 மாத அரியர் தொகை (DA Arrears) |
| நிலை 1 | ரூ.18,000 | ரூ.540 | ரூ.2,160 |
| நிலை 2 | ரூ.19,900 | ரூ.597 | ரூ.2,388 |
| நிலை 3 | ரூ.21,700 | ரூ.651 | ரூ.2,604 |
| நிலை 4 | ரூ.25,500 | ரூ.765 | ரூ.3,060 |
| நிலை 5 | ரூ.29,200 | ரூ.876 | ரூ.3,504 |
| நிலை 6 | ரூ.35,400 | ரூ.1,062 | ரூ.4,248 |
| நிலை 7 | ரூ.44,900 | ரூ.1,347 | ரூ.5,388 |
| நிலை 8 | ரூ.47,600 | ரூ.1,428 | ரூ.5,712 |
| நிலை 9 | ரூ.53,100 | ரூ.1,593 | ரூ.6,372 |
| நிலை 10 | ரூ.56,100 | ரூ.1,683 | ரூ.6,732 |
| நிலை 11 | ரூ.67,700 | ரூ.2,031 | ரூ.8,124 |
| நிலை 12 | ரூ.78,800 | ரூ.2,364 | ரூ.9,456 |
| நிலை 13 | ரூ.1,23,100 | ரூ.3,693 | ரூ.14,772 |
| நிலை 13A | ரூ.1,31,100 | ரூ.3,933 | ரூ.15,732 |
| நிலை 14 | ரூ.1,44,200 | ரூ.4,326 | ரூ.17,304 |
| நிலை 15 | ரூ.1,82,200 | ரூ.5,466 | ரூ.21,864 |
| நிலை 16 | ரூ.2,05,400 | ரூ.6,162 | ரூ.24,648 |
| நிலை 17 | ரூ.2,25,000 | ரூ.6,750 | ரூ.27,000 |
| நிலை 18 | ரூ.2,50,000 | ரூ.7,500 | ரூ.30,000 |
மத்திய அரசின் இந்த அறிவிப்பால், சுமார் 1.17 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதனை ஒரு "தீபாவளிப் பரிசு" என்று வர்ணித்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தில் (DR) செய்யப்பட்டுள்ள இந்த உயர்வு, 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ அதிகரிப்பு ஜூலை மாதம் முதலே கணக்கிடப்பட்டு, அதற்கான பலன்கள் வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக அதிகரிக்கும். அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயரும்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ₹10,016.10 கோடி செலவு ஏற்படும். மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியில் திருத்தம் செய்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவிக்கத்தை ஈடுசெய்ய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் அளிக்கப்படுகின்றன.