சென்னை: தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வியாழக்கிழமை அன்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சமீபத்திய வரைவு வாக்காளர் பட்டியலின் படி சென்னையின் வாக்காளர் நிலவரத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
2027-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் (SSR) கீழ், சென்னையின் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான உயர்வு காணப்படுகிறது. சென்னையின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 29.14 லட்சமாக உயர்ந்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 21,403 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்; இது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் 0.74% வளர்ச்சியாகும்.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 28,93,505-லிருந்து 29,14,908 ஆக உயர்ந்துள்ளது. இந்த வரைவுப் பட்டியலில் 14,04,968 ஆண் வாக்காளர்களும், 15,09,040 பெண் வாக்காளர்களும், 900 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ஜி.எஸ். சமீரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், ரிப்பன் கட்டிடத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
மொத்த வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 2,28,139 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம் (Harbour) தொகுதியில் மிகக் குறைவாக 1,20,852 வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் 46,200 இளம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள நபர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும், விவரங்களைப் புதுப்பிக்கவும் உதவும் வகையில், நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்கள், ஜனவரி 2027-க்குள் அல்லது அதற்கு முன்பாக 18 வயது பூர்த்தியடையவுள்ளவர்கள் மற்றும் தங்கள் தனிப்பட்ட விவரங்களில் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
SSR 2027-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4 அன்று வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், சென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 4,079-லிருந்து 4,071-ஆக, அதாவது எட்டு வாக்குச் சாவடிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி கே. கற்பகம் தெரிவித்ததாவது:
"வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், எந்தவொரு வாக்குச் சாவடியிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், வாக்குச் சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன."
தகுதியுள்ள குடியிருப்பாளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளனவா என்று சரிபார்த்து, ஏதேனும் திருத்தங்கள் அல்லது விண்ணப்பங்கள் தேவைப்பட்டால், டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்கள், 13 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளன. அவை: