SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீய சக்தி vs அம்மன் சக்தி..இறுதியில் வென்றது யார்? மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்!

Mookuthi Amman 2 Review Tamil : நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் திரைப்படம்தான், மூக்குத்தி அம்மன் 2. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 06, 2026, 10:35 AM IST | Updated: Nov 06, 2026, 12:33 PM IST
Image Credit: Mookuthi Amman 2 | X Post
Join

Mookuthi Amman 2 Review Tamil : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், நயன்தாரா. இவர், ஏற்கனவே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடித்திருந்ததை அடுத்து, இதற்கு அடுத்த பாகமான மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் அம்மன் அவதாரமாக நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்க, நயன்தாராவுடன் சேர்ந்து ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, ரெஜினா, இனியா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

கதை என்ன?

போலீஸ் அதிகாரியாக இருக்கும் சக்திக்கு (நயன்தாரா) தினமும் இரவில் கெட்ட கனவுகள் வருகிறது. அந்த கனவுகளில் திரும்ப திரும்ப ‘மயிலாஞ்சிக்கு போ..மயிலாஞ்சிக்கு போ..’ என ஒரு ஊரின் பெயரை திரும்ப திரும்ப ஒரு உருவம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது, ஏதோ போரில் இருப்பது போன்ற காட்சிகளும் வந்து செல்கின்றன. இதனாலேயே, மயிலாஞ்சிக்கு தன் தாயான மாலா அம்மாவை (ஊர்வசி) அழைத்துக்கொண்டு செல்கிறாள், சக்தி. அங்கு, அவளை கொல்வதற்கு தீய சக்திகள் திட்டம் தீட்டுகின்றன.

2000 வருட பகையை தீர்க்க மறு ஜென்மம் எடுத்த துனியா விஜய் மற்றும் பைரா (ரெஜினா கசான்ட்ரா) ஆகியாேர் பல்வேறு பூஜை மற்றும் யாகங்களை நடத்துகின்றனர். சக்திதான், மூக்குத்தி அம்மனின் மறு அவதாரம் என்று வில்லன்களுக்கு தெரிய வர, சக்திக்கு அது தெரியாமலேயே போகிறது. இதனால், இறுதியில் வென்றது தீய சக்தியா? அம்மன் சக்தியா? என்பது க்ளைமேக்ஸ் ஆக எடுக்கப்பட்டுள்ளது.

சுந்தர்.சி படத்தில் காமெடி இல்லாமல் எப்படி..?

சுந்தர்.சி இதுவரை எடுத்திருக்கும் அரண்மனை படங்களில் வழக்கமான ஒரு டெம்ப்ளேட் இருக்கும். ஒரு ஊர், அந்த ஊரில் இருக்கும் பெரிய அரண்மனை, அந்த அரண்மனையில் பழிவாங்க துடிக்கும் பேய், பேயின் ஆட்டத்தை அடக்க வியூகிக்கப்படும் திட்டங்கள் மண்ணாக போவது, இறுதியில் Good vs Evil சண்டை, கடைசியில் நல்ல சக்தி ஜெயிப்பது. இந்த டெம்ப்ளேட்டை சற்று மாற்றி, அப்படியே அம்மன் படத்திற்கும் அப்ளை செய்திருக்கிறார், சுந்தர்.சி.

இருப்பினும், அவருடைய பிற படங்களில் காமெடிக்கு என்று தனியாக ஒரு ரைட்டிங் இருக்கும். அது படத்திற்கு பெரிய பலமாகவும் இருக்கும். மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் காமெடிக்குரிய காட்சிகள் இருக்கிறது. ஆனால் சிரிப்புதான் வர மறுக்கிறது. ஊர்வசி மட்டும் ஆங்காங்கே தனியாக ஸ்கோர் செய்து மக்களை புன்முறுவல் செய்ய செய்கிறார். அதைத்தவிர படங்களில் காமெடிக்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் யோகி பாபு மற்றும் லொல்லு சபா சாமிநாதன் ஆகியாேர் சிரிப்பு மூட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களாலும் அதில் வெற்றி காண முடியவில்லை. இதனால், வழக்கமாக சுந்தர்.சி படங்களில் வரும் காமெடி, இந்த படத்தில் தோற்று போனதோ எனும் கேள்வி எழுகிறது.

நயன்தாராவை அம்மனாக ஏற்றுக்கொள்ள முடிந்ததா?

ஆம், முடிந்தது. மூக்குத்தி அம்மன் 1 படத்தில். அதுவும், அவர் கேமியோ ரோலில் நடித்தார் என்பதாலோ என்னவோ அம்மன் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் ஒன்று கோபமாக பார்க்கிறார், இல்லையெனில் பயந்து பாேய் பார்க்கிறார். இரண்டிற்கும் நடுவிலான நடிப்பை அவர் வெளிப்படுத்தாதது போன்ற உணர்வை படம் முழுவதும் தந்து கொண்டே இருக்கிறார். 40களில் இருக்கும் நயன்தாராவை, இன்னும் 20களில் இருக்கும் ஹீரோயின் போல காட்ட முயற்சித்து தோல்வியை தழுவுகிறார், இயக்குநர்.

வில்லி என்றால் அரைகுறை ஆடையில்தான் வர வேண்டுமா..?

மூக்குத்தி அம்மன் 2 படத்தை பொறுத்தவரை, நயன்தாராதான் அம்மன், அதாவது அவர்தான் நல்ல சக்தி. ரெஜினா சூனியக்காரி, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் தீய சக்தி. நயன்தாராவை காண்பிக்கும் போது மட்டும், அவருக்கு நேர்த்தியான உடைகளை கொடுத்து, உடல் முழுவதும் கவர் செய்யும் வகையிலான காட்சிகளை காண்பிக்கின்றனர். அதிலும் அம்மனாக வரும் போது, தலை முதல் கால் வரை தங்க நகை பூட்டி பட்டுப்புடவை அணிந்து, தலையில் கிரீடம் அணிந்து பொலிவுடன் பிரகாசமாக வருகிறார், நயன்தாரா.

மேலும் படிக்க | Ramayana Twitter Review : ’ராமாயணா’ படம் சூப்பரா..? சுமாரா..? ரசிகர்கள் விமர்சனம் இதுதான்..!

ஆனால், இதுவே தீய சக்தியான ரெஜினாவை காண்பிக்கும் போது, அவரது அந்தரங்க அங்கங்களை மட்டுமே மறைக்கும வகையிலான ஆடைகளை அணிவித்து, கவர்ச்சியாக காண்பித்திருக்கிறார், சுந்தர்.சி. அது ஏன், குறைவான ஆடைகளை அணிந்து வருபவர்கள், கண் முழுவதும் கருப்பு மை பூசி, கருப்பு ஐ ஷேடோ போடுபவர்கள் மட்டும்தான் வில்லன்களாக இருப்பார்களா? அப்போது அந்த கேர்கடரில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் டிக்னிட்டி இல்லையா? அவர்கள் உடலை திரையில் காண்பிப்பது சரியா? அவர்கள் மட்டும் என்ன உங்களுக்கு தக்காளி தொக்கா? என்றெல்லாம் இயக்குநரை பார்த்து கேட்க தோன்றுகிறது. ஆனால், அவர் இப்படித்தான் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் அதை கேட்டாலும் பிரயாேஜனம் இல்லை எனும் முடிவுக்கு நாமே வந்து விடுவதுதான் சரி.

சொதப்பிய AI-CG!

சில நாட்களுக்கு முன்பாக, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து கொடுத்திருந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, படத்தில் பல்வேறு தமிழ் டெக்னீஷியனர்கள் இரவு பகல் பாராது உழைத்திருப்பதாகவும், சில போட்டோக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அது போன்ற கிராஃபிக்ஸை ஏஐ உபயோகித்து உருவாக்கியதாகவும் கூறி, இதனால் சிஜி-யை குறை கூறும் முன்பு சற்று யோசித்து பாருங்கள் என்ற விமர்சகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இத்தனையும் பேசியவர், பொம்மை படம் போன்ற ஏஐ காட்சிகளை படத்தில் வைத்தது ஏன்? என்றுதான் தெரியவில்லை. அடர்த்தியன ஒரு காட்டிற்குள் இருக்கும், குகையை காண்பிக்கும் காட்சி படத்தில் அமைந்திருக்கும். அந்த குகைக்காக ஆர்ட் டிசைன் செய்த இவர்கள், அந்த அடர்த்தியான காட்டிற்காக ஏஐ டிசைன் செய்யாமலேயே இருந்திருக்கலாம் என தோன்றியது. இருப்பினும், இந்த டிசைன்கள் குழந்தைகளும், பக்தியுடன் இருப்பவர்களும் என்ஜாய் செய்யக்கூடிய வகையில் உள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு ப்ரமோ வராதா? ரசிகர்களை ஏமாற்றிய ‘அரசன்’ படக்குழு! தள்ளிப்போவது ஏன்?

தேவையற்ற கவர்ச்சி வேற..

சுந்தர்.சியின் அனைத்து படங்களிலும் A ஜோக்ஸ், கவர்ச்சிக்குரிய வகையில் படத்தில் வரும் ஹீரோயின்களை காண்பிப்பது வாடிக்கைக்குரிய விஷயம்தான். ஆனால், “அம்மன் படத்தில் எல்லாம் அவரு அப்படி வைக்க மாட்டாருப்பா..” என்று பலர் பேசியதை கேட்க முடிந்தது. அவர்களை பார்த்து சுந்தர்.சியே “அம்மன் படமா இருந்தா என்ன? எல்லா படத்திலும் அந்த மாதிரி காட்சிகளை வைப்பேன்” என்று கூறுவது போல ஒரு காட்சியை வைத்திருக்கிறார். இதை பார்க்கும் போது முகள் சுளிப்பதா? தியேட்டரில் இருந்து எழுந்து ஓடி விடுவதா? என தெரியவில்லை.

அரசியல் குறியீடுகள் உள்ளதா..?

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில், ஆங்காங்கே தாமரையை காட்டும் பல காட்சிகள் இருந்தன. கடைசியில் அம்மன் அவதாரம் எடுப்பதற்கு கூட, கோல்டன் நிறத்தில் தாமரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இது அரசியல் குறியீடா இல்லையா என்று கேள்வி எழுப்பும் அந்த நேரத்தில், இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

படத்தில் தீய சக்தி மிகுந்த வில்லன்களாக சுனில் மற்றும் கருட ராம் ஆகியோ வருகின்றனர். இதில் அவர்களுக்கு கருப்பு-சிவப்பு உடையே வழங்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போதும், அரசியல் குறியீடாக இருகுமோ எனும் கேள்வி எழுகிறது.

மியூசிக்-ஐ பத்தி பேசவே இல்லையே..

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு, சுந்தர்.சிக்கு ஃபேவரெட்டான ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். அம்மனை ஆக்ரோஷமாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் மியூசிக் போட்டார் என்பது புரிகிறது..ஆனால் அதற்கென்று ரசிகர்களின் காதுகள் பாவமில்லையா ஆதி? உங்களிடம் இருக்கும் அனைத்து இசைக்கருவிகளையும் இந்த படத்திற்காக உபயோகிக்கும் முன்பு..கொஞ்சம் யோசித்திருக்கலாம். படத்தின் பாடல்களில் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை.

மொத்தத்தில்..

அரண்மனை போன்ற படங்களை எடுக்கும் போது, திரைக்கதையில் காட்டும் ஈடுபாட்டை கொஞ்சமாவது சுந்தர்.சி இதில் காட்டியிருந்தால், மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி இருப்பர். இருப்பினும், ரொம்ப யோசிக்காமல் படத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கும், தெய்வ பக்தி நிறைந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த படம் பிடிக்கலாம்.

மேலும் படிக்க | ‘சீன்’ ட்விட்டர் ரிவ்யூ! 3வது ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரா சூர்யா? ரசிகர்களின் விமர்சனம்..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES